Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?

தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?

தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?

தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?

ADDED : ஜூலை 25, 2011 10:21 PM


Google News

தேவாரம் : தேவாரத்தில் குண்டு வெடித்ததில், பெண் உட்பட இரண்டு பேர் உடல் சிதறி இறந்தனர்.

வெடித்தது ராக்கெட் லாஞ்சரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவாரம் நாடார் வடக்குதெருவை சேர்ந்தவர் குணசேகரன்(44), பழைய இரும்பு வியாபாரி. நேற்று தனது வீட்டின் முன்புறம் அமர்ந்து, பழைய இரும்பு பொருட்களை தரம் பிரித்தார். காப்பர் ஒயர் வெளியில் தெரியுமாறு இருந்த பண்டலை சுத்தியலால் உடைத்தபோது பலத்த சத்தத்துடன் அது வெடித்தது. 2 கி.மீ., தூரத்திற்கு சத்தம் கேட்டது. வெடிகுண்டின் துகள்கள் பாய்ந்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே குணசேகரனும், அந்த வழியாக ரோட்டில் சென்ற பெருமாள் மனைவி பவுன்தாயும்(58) உயிரிழந்தார். நடந்தது என்ன: இப்பகுதியை சேர்ந்த ஜெயராஜ் கூறுகையில்,' மதியம் 2.20 மணிக்கு பலத்த சத்தம் கேட்டது. வீடுகள் குலுங்கின. காஸ் சிலிண்டர் அல்லது மின் டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால், கொடூரமான முறையில் இருவரும் இறந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தோம். குணசேகரனின் உடல் பாகங்கள் அருகில் உள்ள மரக்கிளையிலும், வீட்டின் கூரையிலும் தொங்கியது. தரையில் ஒரு அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது,'என்றார்.



ராக்கெட் லாஞ்சர்?: சம்பவ இடத்தை பார்வையிட்ட ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில்,'விசாரணைக்கு பின் வெடித்தது எந்தவகை குண்டு என்பது தெரிய வரும்,'என்றார். அதேசமயம் வெடித்த குண்டின் வீரியத்தை பார்க்கும் போது, டெட்டனேட்டர் செருகிய ஜெலட்டின் பண்டல் அல்லது ராக்கெட் லாஞ்சராக இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கியூபிரிவு: பவுன்தாய் உடலிலிருந்து வெடிகுண்டின் துகள்களை தடயவியல் நிபுணர் ஜெயபிரகாஷ் சேகரித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.



லாஞ்சர்?: குண்டு வெடிப்பை பார்த்த முத்துமாரி(35) போலீசாரிடம் கூறுகையில்,''மளிகை சாமான் வாங்க குணசேகரன் வீட்டை கடந்து சென்றேன். அவர் 2 அடி உயரமுள்ள வெள்ளைநிற உருளையை வைத்திருந்தார். அங்கிருந்து 25 அடி தூரம் சென்றபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. பவுன்தாய் ரத்த வெள்ளத்தில் சாக்கடையில் கிடந்தார். குணசேகரனின் உடல் அப்பகுதி முழுவதும் சிதறி கிடந்தது. எனது கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது,' என்றார்.



நக்சல்?: தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் தேடப்படும் மாவோயிஸ்ட் நக்சல் தலைவர் மகாலிங்கம்(50), ஜாமினில் வந்து தேவாரம் மேட்டுப்பட்டியில் தங்கியிருந்த போது(கடந்த ஆண்டு) தலைமறைவானார். இவரது ஆதரவாளர்கள் நாச வேலைக்கு பயன்படுத்த கொண்டு வந்த ராக்கெட் லாஞ்சரை, யாராவது எடுத்து பழைய இரும்பிற்கு விற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us