Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேங்கிக் கிடக்கும் மழை நீர்: துர்நாற்றத்தில் வியாபாரிகள்

தேங்கிக் கிடக்கும் மழை நீர்: துர்நாற்றத்தில் வியாபாரிகள்

தேங்கிக் கிடக்கும் மழை நீர்: துர்நாற்றத்தில் வியாபாரிகள்

தேங்கிக் கிடக்கும் மழை நீர்: துர்நாற்றத்தில் வியாபாரிகள்

ADDED : ஆக 30, 2011 10:32 PM


Google News

பொன்னேரி : நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர்.

பொன்னேரி ஹரிஹரன் பஜார் சாலையில் ஏராளமான வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ளன. பொன்னேரியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் வியாபார மையமாகவும் இது திகழ்கிறது. இதே தெருவில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. தெருவின் தேரடி முனையில் இந்த அலுவலகம் எதிரில் மழைநீர் குளம்போல் தேங்கிக் கிடக்கிறது. இங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்ற சாலையின் குறுக்கே சிறிய இரும்பு பைப்கள் அமைக்கப்பட்டன. கடந்தாண்டு இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட அப்பணிக்கு செலவிட்ட தொகை வீணானதுதான் மிச்சம்.



எந்த பயன்பாட்டிற்காக இரும்பு பைப்கள் அமைக்கப்பட்டதோ அந்த திட்டம் வீணாகி, தற்போது அந்த இரும்பு பைப்புகள் பயன்பாடின்றி தூர்ந்து போய் உள்ளது. சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீர் அங்கிருந்து வெளியேறாமல், அதனுடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு, அவை முறையாக வெளியேறாமல் ஹரிஹரன் பஜார் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர். சாலையில் உள்ள கழிவுநீரை கண்டு வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வருவதை தவிர்க்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், பேரூராட்சித்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.



பொன்னேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால், அவர்கள் கடமைக்கு வந்து தேங்கிக் கிடக்கும் மழைநீரில் உள்ள குப்பையை அள்ளி, சாலையிலேயே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். எனவே வியாபாரிகள், பொதுமக்கள் நலன்கருதி ஹரிஹரன் பஜார் சாலையில் தேங்கும் மழைநீர் முறையாக வெளியேற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையில் குவியும் குப்பையையும் உடனுக்குடன் அகற்ற பேரூராட்சி நிர்வாகமும் முன்வரவேண்டும்.



இதுகுறித்து பொன்னேரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ''தேரடி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பைப்கள் உரிய பராமரிப்புடன் உள்ளது. பேரூராட்சியில் தேங்கும் குப்பையால் மழைநீர் சாலைகளில் தேங்கி விடுகிறது. குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நிதி ஒதுக்காததால் உதவித்தொகை : ஆணை பெற்ற பயனாளிகளுக்கு கிடைக்கல



திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு போதிய நிதி ஒதுக்காததால், பிப்ரவரி மாதம் முதல் ஜூலை 31 வரை அரசின் உதவித்தொகை பெற ஆணை பெற்ற பயனாளிகளுக்கு, முதியோர் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.மாநிலத்தில் மார்ச் ஒன்றாம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும், முன் தேதியிட்டு அப்போதைய தி.மு.க., அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை 1,224 பயனாளிகளுக்கு வழங்கியது. இவ்வாறு மாவட்டத்தில் முதியோர், விதவை, விவசாய கூலி என சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் ஆணையை வழங்கினர். இந்த ஆணை, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது.



அனைவருக்கும் மே ஒன்று மற்றும் ஜூன் ஒன்று முதல் மாதா மாதம் 400 ரூபாய் முதியோர் உதவித்தொகை அளிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. இத்தொகை அவர் இறக்கும் வரை கொடுக்கப்படும் என, அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் பயனாளிகளுக்கு கொடுத்த ஆணைப்படி, இதுவரை முதியோர் உதவித்தொகை யாருக்கும் வழங்கப்படவில்லை.



இதுகுறித்து ஆணை பெற்ற பயனாளிகள் பலர் தாலுகா அலுவலகத்தில் வந்து கேட்டால், 'முதியோர் உதவித்தொகை கண்டிப்பாக வரும்' என கூறி அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆணையின் நகல், திருவள்ளூர் தாசில்தார், மாநில கணக்கு நிர்வாகி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இவை சம்பந்தப்பட்ட கிராம வி.ஏ.ஓ., மூலம் பயனாளிகளுக்கு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 பயனாளிகள் இந்த முதியோர் உதவித்தொகை ஆணையை வைத்துள்ளனர். இவர்களுக்கு முறைப்படி முதியோர் உதவித்தொகை கிடைக்குமா என கேட்டதற்கு, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஒருவர் கூறும் போது, ''பிப்ரவரி மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற ஆணை பெற்றவர்களுக்கு தற்போது உதவித்தொகை, பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதற்கான நிதியை அரசு வழங்கியதும் ஆணை பெற்ற அனைவருக்கும் உதவித்தொகை அனுப்பப்படும்,'' என்றார்.



சட்டசபைத் தேர்தலையொட்டி மக்களை கவரும் வகையில், அப்போதைய தி.மு.க., அரசு இவ்வாறு பயனாளிகளுக்கு பின் தேதியிட்டு, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கியிருக்கிறது என, பலர் கூறுகின்றனர்.



இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என மாவட்டத்தில், மே முதல் ஜூலை 31 வரை 3 ஆயிரத்து 138 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை பெற்ற அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வசதியாக, அதற்கான நிதியை முறைப்படி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆணை பெற்றவர்கள் விவரம்

பயனாளிகள் பிப்ரவரி மே- ஜூலை

முதியோர் 424 960

மாற்றுத்திறனாளிகள் 151 324

விவசாய தொழிலாளர்கள் 468 1,208

கணவரால் கைவிடப்பட்டவர்கள் 19 59

ஆதரவற்ற விதவைகள் 158 555

முதிர் கன்னிகள் 4 32

மொத்தம் 1,224 3,138



என்.ஆனந்தன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us