ADDED : செப் 21, 2011 01:36 AM
திருவள்ளூர் : மாவட்டத்தின், பெரும்பாலான இடங்களில் நேற்றுமுன்தினம் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், சில நாட்களாக பகலில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது. சில நாட்களில் மட்டும் இரவில் லேசான மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக, வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கன மழை பெய்தது. விடிய விடிய இந்த மழை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, திருவள்ளூர் நகரில் ஏற்கனவே பாதாளச் சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, இந்த திடீர் மழை மேலும் இன்னலை ஏற்படுத்தியது. குறிப்பாக, அவர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அலுவலகத்துக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்பட்டனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில், 90 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டில், 15 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 60 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது.