Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சியுடன் இருகூர், பேரூர், வெள்ளலூர் இணையுமா?கவுன்சிலர்கள் விருப்பம்

மாநகராட்சியுடன் இருகூர், பேரூர், வெள்ளலூர் இணையுமா?கவுன்சிலர்கள் விருப்பம்

மாநகராட்சியுடன் இருகூர், பேரூர், வெள்ளலூர் இணையுமா?கவுன்சிலர்கள் விருப்பம்

மாநகராட்சியுடன் இருகூர், பேரூர், வெள்ளலூர் இணையுமா?கவுன்சிலர்கள் விருப்பம்

ADDED : ஜூலை 13, 2011 02:13 AM


Google News
கோவை : ''மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இருகூர், பேரூர், வெள்ளலூர் பகுதிகளை இணைக்க வேண்டும்,'' என, மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரிவாக்கப்படும் மாநகராட்சிக்குள் புதிதாக இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகள், உத்தேச வரைபடம் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. 'மாநகராட்சியின் உத்தேச வார்டுகள் எல்லை குறித்த விவரங்களை, மன்ற ஒப்புதலுக்கு வைத்து, மன்றத்தின் கருத்தைப் பெற்று வரும் 13ம் தேதிக்குள் மறுசீரமைப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துகள் மீது அரசு உரிய ஆணை பிறப்பிக்கும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் கருத்துகள் அனுப்பாவிட்டால், கருத்துகள் எதுவுமில்லை என கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி அவசரக் கூட்டம் நேற்று மேயர் வெங்கடசாலம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் வார்டுகளின் மக்கள்தொகை வித்தியாசம் பற்றி கேள்வி எழுப்பினர். ஒரு வார்டில் குறைந்த மக்கள் தொகையும், மற்றொரு வார்டில் அதீத மக்கள் தொகையும் இருக்கும் குறைகள் களையப்பட வேண்டும், என்றனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் 'இருகூர், பேரூர், வெள்ளலூர் பேரூராட்சிப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயகுமார் பேசுகையில், ''மாநகராட்சியின் மிக அருகில் இருக்கும் இருகூர், பேரூர், வெள்ளலூர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பது உகந்ததாக இருக்கும். வெள்ளலூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலம் உள்ளது; குப்பைக்கிடங்கு செயல்படுகிறது. எனவே, வெள்ளலூரை மாநகராட்சி எல்லைக்குள் சேர்ப்பது தொலைநோக்கு சிந்தனையுடையதாக இருக்கும். 100 கவுன்சிலர்கள் அமரும் வகையில் கூட்ட அரங்கம் ஆர்.எஸ்.,புரம் கலையரங்கத்துக்கு மாற்றப்பட வேண்டும்,'' என்றார். கவுன்சிலர் ராஜ்குமார் பேசுகையில்,''தற்போதே குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சியின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டும். 72வது வார்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார். சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து பேசுகையில், ''எல்லை விரிவாக்கம் குறித்து கவுன்சிலர்களிடம் முன்னமே கருத்துக் கேட்கப்பட்டிருந்தால், சில பகுதிகளை இணைத்திருக்கலாம். ரகசியமாக நடத்தியதால் இயலவில்லை. இருகூர், பேரூர், வெள்ளலூர் பகுதிகளை இணைக்க முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார். கவுன்சிலர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. கூட்டத்தில், கமிஷனர் பொன்னுசாமி, துணைமேயர் கார்த்திக், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us