ADDED : செப் 14, 2011 01:39 AM
அன்னூர்:உள்ளாட்சித் தேர்தலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிளாஸ்டிக்
கூடை, ரேஷன் கார்டு கவர், மின் கட்டண அட்டை கவர் ஆகியவை இலவசமாக
வழங்கப்பட்டதால், அன்னூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.உள்ளாட்சித்
தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. போட்டியிட விரும்பும் பிரமுகர்கள்
பலர் வீடு, வீடாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.அன்னூர் பேரூராட்சியில்
அங்கப்பமுதலியார் காலனி பகுதி அடங்கிய 11வது வார்டில் வீடுவீடாக ஒரு அடி
உயரமுள்ள பிளாஸ்டிக் கூடை, ரேஷன் கார்டுக்கான கவர், மின் கட்டண அட்டைக்கான
கவர் ஆகிய மூன்று பொருள் இலவசமாக வழங்கப்பட்டன.
அந்த வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.வீதி, எக்சேஞ்ச் சந்து, சுப்பையா
'லே-அவுட்' உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் இரண்டு நாட்களாக வீடுவீடாக மூன்று
பொருட்களும் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. வார்டில் உள்ள 460 வீடுகளில்
பெரும்பாலான வீடுகளுக்கு பொருட்கள் கொடுத்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், வாக்காளர்களுக்கு இலவசமாக பொருள்
வழங்கினால், நடத்தை விதிமுறை மீறல் என்பதால் முன்னதாகவே இந்த பொருள்கள்
வழங்கப்பட்டுள்ளன.மற்ற வார்டுகளில் என்ன பொருள் கொடுக்கலாம் என, போட்டியிட
உத்தேசித்துள்ளவர்கள் யோசித்து வருகின்றனர்.


