Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை

ADDED : செப் 15, 2011 11:24 PM


Google News

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, பிராந்தி குடித்த இருவர் பரிதாபமாக இறந்தனர்.

பிராந்தியில் விஷம் கலக்கப்பட்டிருந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவிற்குட்பட்ட, வயலாத்தூர் கிராமம், புதுத் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம், 65. கூலித் தொழிலாளி. இவர், பழையசீவரம் அருகே பாலாற்று மணல் குவாரியில், லாரிகளில் மணல் ஏற்றும் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வரும்போது, டாஸ்மாக்கில் மது வாங்கி வந்து குடிப்பார்.



வழக்கம்போல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாங்கி வந்த மதுவில் சிறிது அருந்தினார். சிறிதுநேரத்தில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அப்போது, அவரது உறவினர் பாரதி அங்கு வந்தார். ஏகாம்பரம் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு, அவர் மீதி வைத்திருந்த மதுபானத்தை, எடுத்துக் கொண்டு வெளியேறினார். பின் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூபாலன், 45, என்பவரை அழைத்துக் கொண்டு மது அருந்த சென்றார்.

முதலில் மதுவை அருந்திய பூபாலன், நெஞ்சு எரிவதாகக் கூறி, பாரதியிடம் மதுவை சாப்பிடாதே என தடுத்து விட்டார். பின் எங்கிருந்து மது வாங்கி வந்தாய் எனக் கேட்க, அவர் ஏகாம்பரத்திடமிருந்து வாங்கி வந்த விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே, இருவரும் ஏகாம்பரம் வீட்டிற்கு சென்றனர். அங்கு மயங்கி விழுந்த ஏகாம்பரத்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, '108' ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர்.



ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஏகாம்பரத்தை சோதித்தபோது, அவர் இறந்திருந்தார். எனவே, அவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த பூபாலனுக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை சிகிச்சைக்காக, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 5 மணிக்கு இறந்தார்.ஏகாம்பரம் குடித்த மதுவில் யாராவது விஷம் கலந்தனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொள்ள, மதுவில் விஷம் கலந்து குடித்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டீன் பிரேம்ராஜ் விசாரித்து வருகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us