ADDED : ஜூலை 29, 2011 11:33 PM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சிறு வணிகம் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த இரு பாலினத்தை சேர்ந்த தனி நபருக்கும் அல்லது சுய உதவி குழுவினருக்கும் தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள ஏதுவாக காய்கறிக்கடை, தையல் கடை, சிற்றுண்டிக்கடை, பூக்கடை, பழக்கடை போன்ற சிறு வணிகங்கள் செய்ய கடனுதவியாக 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
கடனுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியும், மகளிருக்கு 4 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.மாவட்ட மாநகர மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவிதிட்டத்தின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆகியோரை அணுகலாம்.