Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு கிடைத்தது

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு கிடைத்தது

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு கிடைத்தது

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு கிடைத்தது

ADDED : ஜூலை 27, 2011 02:49 AM


Google News
சென்னை : வண்டலூரில் வசித்து வரும் ஒரு மூதாட்டி, வறுமை நிலையிலும் நாய், பூனை உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை சிரமத்துடன் பராமரித்து வருவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, அந்த மூதாட்டிக்கு உதவிகள் குவிகின்றன.வண்டலூரில் வசித்து வருபவர் சாந்தா சிவராமன். இவருக்கு குழந்தைகள் இல்லை. நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்த காலத்தில், கணவரின் உதவியுடன், தெருக்களில் ஆதரவின்றி திரியும் நாய், பூனை உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை எடுத்து வந்து, வீட்டில் வைத்து பராமரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.எவ்வித உதவியும் பெறாமல், இந்த சேவையை அவர் செய்து வந்தார்.

கணவர் இறந்த பின், வறுமை வாட்டியது. ஒருவேளை சோற்றுக்கே தவிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், தன்னையே நம்பியிருக்கும் வாயில்லா ஜீவன்களை விரட்டிவிட மனமில்லாமல், பெரும் போராட்டத்துடன் அவற்றை வளர்த்து வருகிறார். இவரின் நிலை குறித்து, கடந்த மாதம் 29ம் தேதி, 'தினமலர்' நாளிதழில், படத்துடன் கூடிய செய்தி வெளியானது.இதையடுத்து, சாந்தா சிவராமனை தொடர்பு கொண்ட பலர், வாயில்லா ஜீவன்களுக்கு தேவையான பால், ரொட்டி, முட்டை, அரிசி ஆகியவற்றை கொடுத்து வருகின்றனர். மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் இயக்கத்தின் தலைவர் கோ.ப. அன்பழகன் அறிவுறுத்தலின்படி, அவ்வியக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், சாந்தா சிவராமனை நேரில் சந்தித்து, ஆயுள் முழுக்க உதவிகள் செய்வதாக உறுதியளித்தார்.இது குறித்து பார்த்திபன் கூறுகையில், 'ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை 1,500 ரூபாய் மதிப்புள்ள ரொட்டி, முட்டை, அரிசி ஆகியவற்றை எங்கள் இயக்கம் மூலம் வழங்க முடிவு செய்துள்ளோம். இது, அவரது ஆயுள் காலம் வரைக்கும் தொடரும்' என்றார்.உதவிகள் குறித்து சாந்தா சிவராமன் கூறுகையில், ''வாயில்லாத ஜீவன்களை வைத்துக் கொண்டு வறுமையில் வாடிக்கொண்டிருந்த எனக்கு, 'தினமலர்' நாளிதழ் செய்தியைத் தொடர்ந்து உதவிகள் குவிகின்றன. இச்செய்தியை படித்த பலர், அரிசி, ரொட்டி, முட்டை, பால் என அளித்து உதவி வருகின்றனர். தற்போது, ஆதிபராசக்தி அமைப்பும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இவ்வளவிற்கும் காரணமாக இருந்த, 'தினமலர்' நாளிதழுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,'' என்றார்.

கே.எஸ்.வடிவேலு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us