Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்

எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்

எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்

எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்

UPDATED : செப் 19, 2011 04:35 AMADDED : செப் 17, 2011 11:23 PM


Google News
Latest Tamil News

தி.மு.க., ஆட்சியில் இலவச கலர் 'டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி முதலில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவச கலர் 'டிவி' வழங்கப்படுமென தி.மு.க., வாக்குறுதி தந்தது.

திட்டம் துவங்கியபின்,'ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் இலவச 'டிவி' தரப்படும்' என்று கூறப்பட்டது. அதன்படி, 5 கட்டங்களாக ஒரு கோடியே 54 லட்சம் குடும்பங்களுக்கு இலவச 'டிவி' வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்துள்ள ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக, 10 லட்சம் 'டிவி'க்களுக்கு 'ஆர்டர்' கொடுக்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்தம் 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச 'டிவி' வினியோகிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டமே கை விடப்பட்டது.



அ.தி.மு.க., அரசு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளது. இலவச கலர் 'டிவி' திட்டத்தைப் போலவே, கிராமங்களில் துவங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.மொத்தம் ஒரு கோடியே 85 லட்சம் பயனாளிகள் என்று முடிவு செய்து, இந்த ஆண்டில், கிராம ஊராட்சிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சிக்கு இந்த திட்டம் வந்து சேரும்போது, ஆட்சியின் இறுதிக்காலம் வந்து விடும்.



திட்டமிட்டபடி, ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கும் இவற்றைத் தந்து விட முடியுமா என்பது தெரியவில்லை. அப்படிப் பார்த்தாலும், ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கும், ஏற்கனவே, 'டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த இலவசப் பொருள் வந்து சேருமா என்பது கேள்விக்குறியே.



கடந்த ஆட்சியின்போது, இலவச 'டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளவைதான். கிராமப்பகுதிகளில், கட்சி பாரபட்சமின்றி 'டிவி'க்கள் வழங்கப்பட்டன. ஆனால், நகரப்பகுதிகளில் மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பத்தரை லட்சம் ரேஷன் கார்டுகளில், 6 லட்சத்து 91 ஆயிரத்து 188 குடும்பங்களுக்கு 'டிவி' வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு 'டிவி' கிடைக்கவில்லை. இவர்களில், 85 ஆயிரம் குடும்பங்களில் இலவச 'டிவி'க்கான டோக்கன் உள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த டோக்கனுக்கு 'டிவி' எப்போதுமே கிடைக்காது; இலவச கிரைண்டர், மிக்சியும் இப்போது கிடைக்காது. ஏனெனில், நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே இலவசப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இறுதியாக மாநகராட்சிக்கு வந்து சேரும்.அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அப்போதும் இதே நகர்ப்புற குடும்பங்கள்தான் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், நகர்ப்புறங்களில் இலவச 'கலர் டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், ஆளும்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.



நகரங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடுகள் இல்லை என்று வாதிடலாம். ஆனால், ஓர் அரசின் திட்டம் என்பது, எல்லோரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். இந்த அரசுக்கு நகர்ப்புறத்து மக்களும்தான் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்னைக்கு மட்டும் மின்தடையில் விலக்கு என்பதைப்போலவே, 'கிராமங்களுக்கு மட்டுமே இலவசம்' என்பதும் பகிரங்கமான பாரபட்சமே.



இனி போதும் இலவசம் : ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு 5,444 ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர், மிக்சி மற்றும் மின் விசிறியை இலவசமாக வழங்குவதால், அரசுக்கு 10 ஆயிரத்து 71 கோடியே 40 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் தொகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்துடன், இலவச திட்டங்களுக்கு 'மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



-எக்ஸ்.எக்ஸ்.செல்வக்குமார்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us