ADDED : செப் 09, 2011 11:08 AM

கோவை: 'முடியுமா என்று நினைப்பது முட்டாள்தனம்.
முடியும் என்று நினைத்து செயல்படுவதே மூலதனம்,'' என, பாரதியார் நினைவு தின சொற்பொழிவில், மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் மோகன் பேசினார். மகாகவி பாரதியார் நினைவு நாள் சிறப்பு சொற்பொழிவு, பாரதியார் பல்கலையில் நடந்தது. பாரதியின் நினைவு நாளை (செப்.,11) முன்னட்டு நடந்த இந்நிகழ்ச்சியில், பல்கலை தமிழ்த்துறை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். பதிவாளர் திருமால்வளவன் தலைமை வகித்தார்.
மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் மோகன் பேசியதாவது: பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. நம் நாடு சுதந்திரம் பெறும் முன்னரே பெண் விடுதலை குறித்து பாடியுள்ளார். 390 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருந்தால் எத்தகைய சாதனைகளை படைத்திருக்க முடியுமோ அவற்றை 39 வயதில் படைத்தவர் பாரதி. இன்று நடக்கும் பேராட்டங்களில் அச்சமில்லை, அச்சமில்லை என்ற பாரதியின் வரிகளை உச்சரிக்கின்றனர். அந்த அளவுக்கு அவரது பாடல் வரிகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மானத்தை மறைக்க உதவும் பருத்தி பூ போன்றவர் பாரதி; வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டிருந்தவர். இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க முன்வர வேண்டும். பிரபல தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் உள்ளிட்ட நிஜ நாயகர்கள் குறித்து பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவியருக்கு தெரிவதில்லை. மாறாக சினிமாக்களில் வரும் நிழல் நாயகர்களை தான் அதிகளவில் தெரிந்து வைத்துள்ளனர். வாழ்வில் முன்னேற அவரவருக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். லட்சுமி அம்மையார் பெற்றெடுத்த சரஸ்வதி பாரதி; இளம் வயதிலேயே சர்வதேச நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளும் நோக்கில், காசியில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். இன்றைய இளைஞர்கள் சஞ்சலம் மற்றும் சபலத்துக்கு ஆளாகாமல் இருக்க பிரபல தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாக கொண்டு வாழ வேண்டும். இலக்கிய மாணவர்களுக்கு அறிவியல் பார்வை வேண்டும். அறிவியல் மாணவர்களுக்கு இலக்கிய பார்வை வேண்டும். முடியுமா என்று நினைப்பது முட்டாள்தனம். முடியும் என்று நினைத்து செயல்படுவதே மூலதனம். தமிழ் இலக்கியத்தை பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். ஆளுமைத்திறனை வளர்த்துக் கொண்டதே பாரதியாரின் பெருமைக்கு காரணம். இவ்வாறு, அவர் பேசினார்.
விமலா மோகன் இசைக்குழுவினர், பாரதியார் பாடல்களை இசைத்தனர். பல்கலை டீன் மனோகரன், கங்கா மருத்துவமனை சேர்மன் சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.