Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கலெக்டர் அலுவலக துப்புரவு பணிக்கு வசூல்

கலெக்டர் அலுவலக துப்புரவு பணிக்கு வசூல்

கலெக்டர் அலுவலக துப்புரவு பணிக்கு வசூல்

கலெக்டர் அலுவலக துப்புரவு பணிக்கு வசூல்

ADDED : செப் 12, 2011 03:16 AM


Google News
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை பராமரிக்க, ஒவ்வொரு அரசுத்துறையில் இருந்தும் 3,000 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வருவாய் ஈட்டும் துறைகளை சார்ந்தவர்கள் கொடுக்கும் நிலையில், மற்ற துறைகளை சார்ந்தவர்கள், கையில் இருந்து பணத்தை இழக்க வேண்டுமா? என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து மாடிகளை கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 2008ல் துவங்கிய பணி, மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. 50 அரசுத்துறை அலுவலகங்கள் இங்கு செயல்படுகின்றன. பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டாலும், சரியான பராமரிப்பு இல்லாததால், கலெக்டர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன், குப்பை கூளமாக காட்சியளித்தது. அப்போதைய கலெக்டர் சந்திரகுமார், கலெக்டர் அலுவலகத்தை, வீடாக நினைத்து பராமரிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால், யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

துப்புரவு பணியை பொதுப்பணித்துறையினர்தான் மேற்கொள்ள வேண்டும் அல்லது கலெக்டர் அலுவலக பராமரிப்புக்கென அரசிடம் உரிய நிதி கேட்க வேண்டும்.

பொதுப்பணித்துறை வசம் உள்ள இக்கட்டிடம், கலெக்டரிடம் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன், ஒரு தளத்துக்கு ஒரு பொறுப்பாளர் என்ற வகையில், கலெக்டரால், வருவாய் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.அவர்கள், கலெக்டர் அலுவலக துப்புரவு பணியை மேற்கொள்ள, ஒரு தளத்துக்கு, இருவர் வீதம் 10 தற்காலிக பெண் ஊழியர்களை நியமித்தனர். தற்போது, 3,500 ரூபாய் வீதம் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. மூன்று மாதமாக, உதிரி வருவாய் கிடைக்கும் துறைகளில் இருந்து, 1000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், பணியாளர்களுக்கு வழங்கியதுபோக, மீதமுள்ள தொகை அலுவலர்கள் சிலரால் சுருட்டப்பட்டுள்ளது.

ஊழியர்களிடத்திலும், குறிப்பிட்ட தொகை துப்புரவு பணி உபகரணங்கள் வாங்குவதற்கு கொடுக்க வேண்டும் என, அதிகாரிகள் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.கலெக்டர் அலுவலக, அரசுத்துறை ஊழியர்கள் கூறியதாவது:ஆரம்பத்தில், கலெக்டர் அலுவலகத்தை சுத்தம் செய்ய இதர வருவாயில் இருந்து ஒரு தொகையை கொடுத்தோம். தற்போது, துப்புரவு பணிக்கான பொறுப்பை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) வசம் ஒப்படைத்து விட்டனர். முதலில் வழங்கிய தொகையை விட, கூடுதல் தொகை கேட்கின்றனர். பொதுப்பணித்துறையினர் தான் முழுவதுமாக பராமரிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில், தனியாருக்கு கொடுத்து பராமரிக்கும் முறையை, கலெக்டர் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us