"மாஜி' எம்.எல்.ஏ., காவல் நீட்டிப்பு
"மாஜி' எம்.எல்.ஏ., காவல் நீட்டிப்பு
"மாஜி' எம்.எல்.ஏ., காவல் நீட்டிப்பு
ADDED : செப் 14, 2011 01:26 AM
பல்லடம் :நில மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில், கைது செய்யப்பட்ட தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., மணியை, மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க, பல்லடம் மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.
திருப்பூர் முருங்கப்பாளையம் தெற்கு திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்,36; விவசாயி. இவருக்குச் சொந்தமான 15.16 ஏக்கர் நிலத்தை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, பொங்கலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மணி ஆகியோர், மணியின் மகன் வெங்கடேஸ்வரன் பெயருக்கு, ஒரு கோடியே 74 லட்ச ரூபாய்க்கு கிரைய ஒப்பந்தம் செய்தனர்.ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மீதித் தொகையை பின்னர் தருவதாகக் கூறி, மீதமுள்ள பணத்துக்கு மூன்று காசோலை கொடுத்தனர். அவற்றை, வெங்கடேஷ் வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது.பணத்தைக் கேட்ட போது, 'மாஜி' அமைச்சர் பழனிச்சாமி, அவரின் மகன் பைந்தமிழ்பாரி, 'மாஜி' எம்.எல்.ஏ., மணி மற்றும் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பாலன், பூபதி ஆகியோர், பணத்தை கொடுக்க முடியாது எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.அவினாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி, கடந்த மாதம் 17ம் தேதி மணியும், கடந்த 7ம்தேதி பைந்தமிழ்பாரியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று காலை, பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணிக்கு, மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து, மாஜிஸ்திரேட் பத்மா உத்தரவிட்டார்.இவ்வழக்கில், 'மாஜி' அமைச்சர் பழனிச்சாமி முன் ஜாமின் பெற்றுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பாலன், பூபதி ஆகியோரை, பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.


