ADDED : செப் 27, 2011 01:25 AM
பெங்களூரு: உலகப்புகழ் வாய்ந்த மைசூரு தஸரா விழாவை, சாமுண்டி மலையில் உடுப்பி பேஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.
அரண்மனை, ரோடுகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உலக புகழ் பெற்ற, 401வது ஆண்டு மைசூரு தசரா விழா, நாளை காலை சாமுண்டி மலையில் துவங்கவுள்ளது. காலை, 9 மணிக்கு சாமுண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்குகிறது. இந்ந ஆண்டு விழாவை, பேஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மஹா சுவாமிகள் துவக்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, மைசூரு அரண்மனையில் ஸ்ரீகண்ட தத்த உடையார் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி கொடுப்பார்.கர்நாடகாவிலுள்ள முக்கிய தேவஸ்தானங்களில் சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாதங்கள் ஸ்ரீகண்டதத்த உடையாரிடம் வழங்கப்படும்.மைசூரு தஸராவை முன்னிட்டு அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், 6ம் தேதி வரை மலர் கண்காட்சி, சினிமா விழா, பாரம்பரிய குத்து சண்டை நிகழ்ச்சி, சர்க்கஸ் என, பத்து நாட்களும் தொடர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நிறைவு நாளான, அக்டோபர் 6ம் தேதி பாரம்பரியமான சம்பு ஜவாரி நடக்கிறது. அன்றைய தினம் அலங்கரித்த யானையில் சாமுண்டீஸ்வரியை, தங்க அம்பாரியில் வைத்து அரண்மனையில் இருந்து, பன்னி மண்டபம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். இந்த ஊர்வலத்தில், யானைகள், குதிரைகள் அணி வகுப்பு இடம் பெறும். முப்படை வீரர்களும் செல்வர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், சாதனையாளர்களும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சாதனை வாகனங்களும் பங்கேற்கும். இதை காண, கர்நாடகாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மைசூருவில் குவிந்துள்ளனர்.