/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆமை வேகத்தில் வேப்பம்பட்டு பாலப் பணி : பொதுமக்கள் கடும் பாதிப்புஆமை வேகத்தில் வேப்பம்பட்டு பாலப் பணி : பொதுமக்கள் கடும் பாதிப்பு
ஆமை வேகத்தில் வேப்பம்பட்டு பாலப் பணி : பொதுமக்கள் கடும் பாதிப்பு
ஆமை வேகத்தில் வேப்பம்பட்டு பாலப் பணி : பொதுமக்கள் கடும் பாதிப்பு
ஆமை வேகத்தில் வேப்பம்பட்டு பாலப் பணி : பொதுமக்கள் கடும் பாதிப்பு
வேப்பம்பட்டு : திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாகி வருவதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக ரயில்பாதை அமைந்துள்ள பகுதியில் ஆறு பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளன. ரயில்வே கட்டுப்பாட்டில் வரும் 32 மீட்டருக்கான பாலப் பணிகள் முதலில் நிறைவு பெற வேண்டும். ஆறு பில்லர்களின் மீது ஆறு 'ஸ்டீல் கிரிடர்'கள் பொருத்தப்பட்டு தளம் அமைக்கப்பட வேண்டும். இப்பணிகளுக்காக மட்டும், நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாகியும், பில்லர் எழுப்பிய நிலையிலேயே இருந்து வருகிறது. ரயில்வே கட்டுப்பாட்டுப் பகுதியில், பாலப் பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர் குமாரிடம், திட்ட நிலவரம் குறித்து விசாரித்த போது, ''மொத்தம் ஆறு ஸ்டீல் கிரிடர்கள் செங்குன்றத்தில் தயாராகி வருகின்றன. அவற்றை பணியிடத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவை வந்து சேர்ந்த பின்னர், ஓரிரு மாதத்தில் எங்களின் பணிகள் முடிவடைந்துவிடும். அதிகபட்சமாக 3 மாதத்திற்குள் ரயில் பாதைக்கு மேல் பாலப் பணிகள் நிறைவு பெற்றுவிடும்,'' என்றார்.
ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த பின்னரே தங்கள் வேலையை மேற்கொள்ள முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகின்றனர். ஆனால், இதற்காக நில எடுப்பு நடவடிக்கையே இன்னும் முடியவில்லை. பாலம் அமைய உள்ள பகுதி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளதால், சாலையில் இருபுறத்திலும் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. சாலையோரத்தில் பாலத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, சில வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு மழை காரணமாக கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால், பாலப் பணி இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில் பாதையை கடந்து செல்ல, வாகன ஓட்டிகள் சிரமப்பட வேண்டியுள்ளது. பாலப் பணிகள் காரணமாக திருவள்ளூர் - ஆவடி சாலையில் இருந்து, பூந்தமல்லி நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள், 2 கி.மீ., தொலைவுக்கு அப்பால் உள்ள மற்றொரு லெவல் கிராசிங் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கூடுதல் தொலைவை கடக்க வேண்டியுள்ளதால், கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
புரோக்கர்கள் ஆர்வம் : பாலப் பணிகள் முடிவடைந்தால் திருவள்ளூர் - ஆவடி சாலையில் இருந்து வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கொசவன்பாளையம் வழியாக திருப்பதி - சென்னை நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில், வாகன போக்குவரத்து வெகுவாக அதிகரிக்கும். இதன் விளைவாக பெருமாள்பட்டு, கோவிலாம்பாக்கம் உட்பட சுற்று வட்டார கிராமங்களில், மனைகளின் விலை எகிறும் என, ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்பகுதியில் தற்போது, சதுரடி 270 முதல் 400 ரூபாய் வரை உள்ளது. பாலம் தயாரானால், இந்த விலை 700 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.