மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை : விரைவுபடுத்த சிதம்பரம் வலியுறுத்தல்
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை : விரைவுபடுத்த சிதம்பரம் வலியுறுத்தல்
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை : விரைவுபடுத்த சிதம்பரம் வலியுறுத்தல்
திம்பு : சார்க் கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, குற்றவாளிகள் மீதான விசாரணையை விரைவாக நடத்தும்படி, பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கிடம் வலியுறுத்தினார்.
பூடானின் திம்பு நகரில், சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.
இதன்பின், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது: இரு நாட்டு உள்துறை அமைச்சர்களுக்கும் இடையேயான சந்திப்பு, இணக்கமான சூழ்நிலையில் நடந்தது. இந்தச் சந்திப்பின்போது, ஏற்கனவே, நிலுவையில் உள்ள விஷயங்களை, விரைவில் தீர்க்கும்படி, இந்திய உள்துறை அமைச்சர், பாக்., உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
அதேபோல், பாக்., சார்பில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு, விரைவில் பதில் அளிக்கும்படி, பாக்., உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், மும்பைத் தாக்குதல் குறித்த விசாரணைக்காக, பாகிஸ்தானில் இருந்து, நீதிக் குழு ஒன்று, விரைவில் இந்தியா வரும் என, பாக்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மும்பைத் தாக்குதல் குறித்த விசாரணைக்காக, இந்திய அதிகாரிகளும், விரைவில் பாகிஸ்தான் வருவர் என, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: இரு அமைச்சர்களும், எந்தெந்தப் பிரச்னை குறித்து பேசினர் என, குறிப்பாக எதுவும், கூட்டறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரச்னைகளுக்கு, இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது, பாகிஸ்தான் சார்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணையை, விரைவாக முடிக்கும்படி, இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும், குற்றவாளிகளின் குரல் மாதிரிகளை, ஆய்வுக்காக, விரைவில் இந்தியாவுக்கு அனுப்பும்படியும், பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
'குற்றவாளிகளின் குரல் மாதிரிகளை இந்தியாவிடம் கொடுக்க, பாகிஸ்தான் சட்டம் அனுமதிக்கவில்லை' என, பாக்., உள்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை, இந்தியா மீண்டும் வலியுறுத்தி இருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.