சேலம் : சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள, 'ஜிம்'மில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன.
'ஜிம்'மில் பயிற்சி செய்யும் இளைஞர்கள் சிலர் கூறியதாவது: கடந்த, 23 ஆண்டுக்கும் மேலாக, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், 'ஜிம்' பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, உடல் திறனை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் ஏராளமாக இருந்தன. 'ஜிம்' ஆரம்பிக்கப்பட்ட நாட்களில், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சேலம் விளையாட்டு மைதானத்துக்கு வருமானமும் வந்தது. காலப்போக்கில் விளையாட்டு உபகரணங்கள் பழுதானாது. தொடர் கோரிக்கை வைத்ததன் மூலம், சில ஆண்டுக்கு முன் உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டது. அடிக்கடி, 'ஜிம்' சாதனங்கள் பழுதானதால், உடல் திறன் பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. ஒரு காலத்தில் மாதம், 5,000 ரூபாய், 'ஜிம்' பயிற்சி செய்வோரிடம் இருந்து கட்டணமாக பெறப்பட்டுள்ளது. 'ஜிம்' அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் நினைத்தால், அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளரை நியமிக்க முடியும். பெரும்பாலான விளையாட்டுகளுக்கு இங்கு பயிற்சியாளர்கள் இல்லை. இங்கு பணியாற்றி வந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமார், சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தற்போது, அந்த இடத்துக்கு நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வாரம் ஒருமுறை அலுவலகம் வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,''நான் இதுவரை சேலத்தில் உள்ள, 'ஜிம்' உடற்பயிற்சி மையத்தை பார்வையிடவில்லை, நாளையோ அல்லது நாளை மறுநாளோ வந்து பார்வையிட்ட பின், உரிய பதில் தருகிறேன்,'' என்றார்.