Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

ADDED : ஜூலை 16, 2011 04:43 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் சாயத்தொழிலில் நிலவும் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மத்திய ஜவுளித்துறை செயலர் ரீட்டா மேனன், தமிழக தலைமை செயலருடன் வரும் 18ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் நடந்த ஜவுளித்தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் பங்கேற்று, பின்னலாடை வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ள சாயத்தொழில் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜவுளித்துறை அமைச்சர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், திருப்பூரில் கடந்த ஐந்தரை மாதங்களாக நிலவும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பின்னலாடை தொழில் துறையினர் படும் துன்பங்களை சங்க தலைவர் சக்திவேல் விளக்கியுள்ளார். மேலும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதாக, சாய ஆலைகள் கடிதம் கொடுத்துள்ளது குறித்து விளக்கியதுடன், ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், திருப்பூர் சாயத்தொழில் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாகவே, திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். சாய ஆலைகளை மூடியதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள குறித்தும், பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்து பேசி, நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பில் சாயத்தொழில் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, வரும் 18ம் தேதி, ஜவுளித்துறை செயலர் ரீட்டா மேனன், தமிழக தலைமை செயலருடன் ஆலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அரசின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து, மேல்நடவடிக்கை தொடரப்படும் என்றும் ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, திருப்பூர் சாயத்தொழில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென தொழில் துறையினர் நம்பிக்கை அடைந்துள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us