/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பழவேற்காடு ஏரியில் மீன்களுக்கு பாதிப்புபழவேற்காடு ஏரியில் மீன்களுக்கு பாதிப்பு
பழவேற்காடு ஏரியில் மீன்களுக்கு பாதிப்பு
பழவேற்காடு ஏரியில் மீன்களுக்கு பாதிப்பு
பழவேற்காடு ஏரியில் மீன்களுக்கு பாதிப்பு
ADDED : ஆக 23, 2011 01:52 AM
பொன்னேரி : தொழில் நிறுவனங்களின் கழிவுகளால், பழவேற்காடு ஏரி மாசடைந்து
வருகிறது. இதனால், ஏரியில் மீன்வரத்து குறைந்துள்ளது; மீனவர்களும்
பாதிப்படைந்துள்ளனர்.பழவேற்காடு ஏரியை ஓட்டி அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி
ஆகிய இடங்களில் வடசென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2, வல்லூர் அனல் மின்
நிலையம், கடல்நீரை நன்னீராக்கும் நிறுவனம், எண்ணூர் துறைமுகம், கப்பல்
கட்டும் தளம் என ஏராளமான தொழில் நிறுவனங்களில் வருகை அதிகரித்துள்ளது.அனல்
மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் பக்கிம்காம் கால்வாய்
மற்றும் பழவேற்காடு ஏரியில் கலந்து, ஏரி நீர் மாசடைகிறது. சாம்பல்கள்
ஏரியின் அடிப்புறத்தில் தேங்குவதால் பல்லுயிர்கள் அழிந்து, மீன்களின்
இனப்பெருக்கம் குறைந்து போனது.துருப்பிடித்துப் போன 'ஸ்லெட்ஜர்':
பழவேற்காடு ஏரியில் தேங்கும் மணலை அப்புறப்படுத்த பிரிட்டிஷ் ஆட்சி
காலத்தில் 'ஸ்லெட்ஜர்' என்று அழைக்கப்படும் இயந்திரத்தை பயன்படுத்தினர்.
இதை கொண்டு அவ்வப்போது ஏரியை தூர்வாரி வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி
காலத்திற்கு பிறகு அந்த 'ஸ்லெட்ஜ்ர்கள்' பயன்பாடின்றி பழவேற்காடு
ஏரிக்கரையில் துருப்பிடித்துக் கிடக்கிறது.மீனவர்கள் கோரிக்கை: ஏரி மற்றும்
முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி ஏரிக்கு நீர்வரத்தை
அதிகரிக்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் மீனவர்களுக்கு வேலை தர
வேண்டும்.இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மணல்
திட்டுக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்களில்
இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏரி மாசடைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு வருவது உண்மை. சில ஆண்டுகளில் மீன் பிடித்தொழில் பாதிப்பு
ஏற்படுவது உறுதி. இதனால், தொழில் நிறுவனங்களில் மீனவர்களுக்கு வேலை தர
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.சென்னையிலிருந்து 60 கி.மீ.,
தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது பழவேற்காடு ஏரி. இந்த ஏரி
தமிழத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் வரை பரந்துள்ளது. காளஞ்சி, ஆரணி,
சுவர்ணமுகி, ராயல் கால்வாய் ஆகிய ஆறுகளின் நன்னீர் இதில் சென்று சேர்கிறது.
கிழக்கு கடற்கரையை ஓட்டி செல்லும் பக்கிங்காம் கால்வாய் பழவேற்காடு
ஏரியின் தென்பகுதியை தொட்டு செல்கிறது.இந்த ஏரி 160 வகையான மீன்கள், 25
வகையான மிதவை புழுக்கள், பலவகையான மெல்லுடலிகள், இறால், நண்டு வகைள்
மற்றும் பிற கடல் தாவரங்கள் என, பல்லுயிர் பண்புகளை கொண்டதாக
உள்ளது.ஏரியின் அமைப்பு: பழவேற்காடு கடல் பரப்பைவிட 7 மீட்டர் உயரத்தில்,
461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. ஏரியை நம்பி பொன்னேரி,
கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தாலுகாவில் 45 மீனவ கிராமங்கள் மீன்பிடித்
தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ
குடும்பங்களில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.பழவேற்காடு ஏரிக்கு,
கடலிலிருந்து உப்புநீரும், ஆற்றுப்படுகைகளிலிருந்து நன்னீரும் வந்து
சேர்கிறது. கடலில் இருந்து ஏரிக்கு நீர் வந்து செல்ல எண்ணூர் மற்றும்
பழவேற்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு முகத்துவாரங்கள் உள்ளன. இவ்வழியாக
ஏரிநீர் கடலுக்கும், கடல் நீர் ஏரிக்கும் என ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை
சுழற்சி முறையில் பயணிக்கிறது.கடல் நீர் ஏரிக்கு வருவதை வெள்ளம் என்றும்,
திரும்பி செல்வதை வத்தல் என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். இந்த சுழற்சி
முறையில் கடலில் இருந்து ஏராளமான மீன் இனங்கள் ஏரிக்கு வந்து சேரும்.
கடலில் கிடைக்காத அரியவகை மீன் இனங்கள் ஏரியில் கிடைக்கும்.பறவைகள்
சரணாலயம்: சென்னைக்கு மிக அருகில் பழவேற்காடு சரணாலயம் உள்ளதால்
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக
ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. அவற்றில் பூநாரை, வர்ண நாரை,
கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, ஆலா, உள்ளான், சாம்பல் நாரை, பெரிய வெள்ளை
கொக்கு என பலவகையான இனங்கள் வருகின்றன. வெளிநாட்டு பறவைகளை காண
சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.
ஆர்.கோபாலகிருஷ்ணன்