Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சரியும் பட்டுக்கூடு விலை; விவசாயிகள் வேதனை

சரியும் பட்டுக்கூடு விலை; விவசாயிகள் வேதனை

சரியும் பட்டுக்கூடு விலை; விவசாயிகள் வேதனை

சரியும் பட்டுக்கூடு விலை; விவசாயிகள் வேதனை

ADDED : ஆக 03, 2011 10:36 PM


Google News
உடுமலை : சீன இறக்குமதிக்கு உதவும் வகையில் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளதால், உள்ளூரில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளுக்கு விலை கிடைப்பதில்லை.

விலை சரிவை தடுக்க, மாநில அரசும் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் பட்டுத்துணி உற்பத்திக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா பட்டு தேவையாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 19 ஆயிரம் டன்னாக இருப்பதால், பற்றாக்குறையை தவிர்க்க பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.கடந்த 2001-02ல் குறைந்த வரி விதிப்பில் சீனாவில் இருந்து 9,258 மெட்ரிக் டன் கச்சா பட்டு இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய பட்டுத்துணிகள் சந்தையில் குவிக்கப்பட்டது. இதனால், உள்நாட்டு பட்டுக்கூடுகளின் விலை கிலோ 90 ரூபாயாகவும், கச்சா பட்டு கிலோ 800 ரூபாயாகவும் சரிந்தது.உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மத்திய அரசு, 2003ம் ஆண்டு ஆய்வு நடத்தி, சீனாவில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இந்தியாவுக்கு கச்சா பட்டு இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தது.வணிக வரித்துறை அமைச்சகம் மூலம் இறக்குமதிக்கான வரிகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது. இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இவ்வரி விதிப்பு 2008 வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்ததால், உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக்கூடு மற்றும் கச்சா பட்டுக்கு நல்ல விலை கிடைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் கோபி, உடுமலை, தர்மபுரி, சேலம் உட்பட பல பகுதிகளில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன. குறிப்பாக, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 3,000 ஏக்கர் வரை மல்பெரி செடி பயிரிட்டு விவசாயிகள் நாள்தோறும் ஒரு டன் வரை பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்தனர். விலையும் கிலோ பட்டுக்கூடு 400 ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது. கடந்த மார்ச் மாதம், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. 3,000 மெட்ரிக் டன் கச்சாப்பட்டை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்தது. இறக்குமதிக்கான வரியையும், 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக, உள்நாட்டில் பட்டுக்கூடுகளின் விலை சரிந்தது. கிலோவுக்கு 200 ரூபாய் வரை விலை குறைந்து, கடந்த இரண்டு மாதங்களாக அதிகபட்சமாக 260 ரூபாய் வரையே விலை கிடைக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், பட்டுக்கூடுகளுக்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும், தமிழகத்தில் பட்டுக்கூடுகளை பட்டு நூல் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற தேவையான தொழிற்சாலைகள் அதிகளவு இல்லை. இதனால், கூடுகளுக்கு ஆதார விலை கூட கிடைப்பதில்லை. விலை போதுமான அளவு உயராத நிலையில், மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே, பட்டுக்கூடுகளுக்கு தமிழக அரசு ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இறக்கு மதிக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us