Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மழையால் நெற்பயிர், வாழை மரங்கள் பாதிப்பு

மழையால் நெற்பயிர், வாழை மரங்கள் பாதிப்பு

மழையால் நெற்பயிர், வாழை மரங்கள் பாதிப்பு

மழையால் நெற்பயிர், வாழை மரங்கள் பாதிப்பு

ADDED : ஆக 17, 2011 02:49 AM


Google News
ஈரோடு: வெயிலால் ஈரோடு மக்கள் வாடி வதங்கி வந்த நிலையில், நேற்று திடீரென மேகம் திரண்டு மழை பெய்ததால் ஈரோடு குளிர்ந்தது. கோபி பகுதியில் நெற்கதிர்கள், வாழை மரங்கள் சாய்ந்தன.

தென்மேற்கு பருவமழை சீஸன் துவங்கினாலும், மழை மறைவு பிரதேசமாக சீஸனில் குறைவான மழையே ஈரோடு மாவட்டம் பெறுகிறது. இருந்தாலும் கடுமையாக கொளுத்தும் வெயிலால் ஈரோடு மக்கள் தவித்து வருகின்றனர். வெளியில் செல்லவே முடியாத நிலையில் வெயில் வாட்டி வருகிறது.

நேற்று முன்தினம் கடுமையான வெயிலால் வதங்கிய மக்களுக்கு, இரவில் சிறிது நேரம் மழை பெய்து ஆறுதல் அளித்தது. நேற்று காலையில் இருந்தே மேகம் திரண்டு இருந்தது. சிறிய மழைத்துளிகள் விழுந்தன. பிறகு வெயில் வாட்டத்துவங்கியது. மதிய நேரத்தில் மீண்டும் மேகம் திரண்டு, வானம் கறுத்தது.

மாலை 3 மணிக்கு திடீரென மழை பெய்யத்துவங்கியது. அரை மணி நேரம் பெய்த மழையால் ஈரோடு குளிர்ந்தது. வடிகால் வசதியில்லாத பகுதிகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியது. திடீரென பெய்த மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோபிசெட்டிபாளையம்: கோபி சுற்று வட்டாரத்தில் இரு நாட்களாக பெய்யும் மழையால் நெல் வயலில் நெற்கதிர்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் சூறாவளியுடன் கூடிய மழையால் 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

கோபி சுற்று வட்டாரத்தில் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்தில் பங்களாபுதூர், கோபி, கூகலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகும் நிலையில், கோபி வட்டாரத்தில் இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நெல் வயல்களில் நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விட்டன. நெல் மணிகள் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோபி சுற்று வட்டாரத்தில் புஞ்சைபுளியம்பட்டி, பங்களாபுதூர், கூகலூர் உள்ளிட்ட இடங்களில் நெல் வயல்களில் நெல் கதிர் கீழே சாய்ந்து விட்டன. கீழே சாய்ந்து கிடக்கும் நெல் கதிர்களை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நம்பியூர், குருமந்தூர், ஆயிபாளையம், காரப்பாடி ஆகிய இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று அடித்தன் காரணமாக இப்பகுதியில் உள்ள வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. ராமசாமி என்பவரது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த 1,000 கதளி வாழை மரங்கள், 500 பூவன் வாழை மரங்கள், பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 700 கதளி வாழை மரங்களும், சண்முகம் என்பவரது தோட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கதளி உள்பட 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்து விட்டன.

விவசாயிகள் கூறியதாவது:

மழை அதிகளவில் பெய்தாலும் சரி, காற்று அடித்தாலும் அதிகளவில் பாதிக்கப்படுவது விவசாயிகளே. கோபி சுற்று வட்டாரத்தில் சென்ற இரு நாட்களாக சிறிய அளவில் மழை பெய்துள்ளது. சிறிய மழையால் நெல் வயல்களில் நெல் கதிர்கள் சாய்ந்து விட்டன. நம்பியூர் வட்டாரத்தில் சூறாவளி காற்று அடித்தன் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விட்டது. விவசாயிகளுக்கு, அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us