/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தே.மு.தி.க., கூட்டணியில் தீராத குழப்பம்; இந்திய கம்யூ., உடன் இழுபறி!தே.மு.தி.க., கூட்டணியில் தீராத குழப்பம்; இந்திய கம்யூ., உடன் இழுபறி!
தே.மு.தி.க., கூட்டணியில் தீராத குழப்பம்; இந்திய கம்யூ., உடன் இழுபறி!
தே.மு.தி.க., கூட்டணியில் தீராத குழப்பம்; இந்திய கம்யூ., உடன் இழுபறி!
தே.மு.தி.க., கூட்டணியில் தீராத குழப்பம்; இந்திய கம்யூ., உடன் இழுபறி!
ADDED : அக் 02, 2011 01:44 AM
கோவை : தே.மு.தி.க., கூட்டணியில் மா.கம்யூ., கட்சியுடன் இடங்கள் உடன்பாடு ஏற்பட்டது; இந்திய கம்யூ., கட்சியுடன் இன்னும் இழுபறி நீடிக்கிறது.உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., தலைமையில் மூன்றாவது அணியாகக் களமிறங்க, கம்யூ., கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாக, அந்தந்த மாவட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் செய்து கொள்ள, இந்த கட்சிகளின் தலைமைகள் ஒப்புதல் அளித்துள்ளன.கோவை மாவட்டத்தில் மா.கம்யூ., கட்சி போட்டியிடும் இடங்கள் தொடர்பாக, தே.மு.தி.க.,வுடன் அக்கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டது. தே.மு.தி.க., நிர்வாகிகள் பாண்டியன், தமிழ்முருகன், எம்.எல்.ஏ., தினகரன், மா.கம்யூ., நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, எம்.பி., நடராஜன், பத்மநாபன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.இதன்படி, கோவை மேயர் பதவியில் மா.கம்யூ., வேட்பாளர் சிவஞானம் நிறுத்தப்பட்டுள்ளார்; மாநகராட்சியில் 4, 7, 23, 29, 37, 40, 42, 48, 49, 51, 52, 60, 63, 65, 70, 76, 80, 84 மற்றும் 87 ஆகிய 19 வார்டுகளும் இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வால்பாறையில் 2,19, மேட்டுப்பாளையத்தில் 15, 16 மற்றும் 19, பொள்ளாச்சியில் 21 ஆகிய வார்டுகளிலும் மா.கம்யூ., போட்டியிடவுள்ளது.இருகூர், காரமடை, சூலூர், கிணத்துக்கடவு, ஆனைமலை உட்பட 27 பேரூராட்சிகளில் 46 வார்டுகளில் மா.கம்யூ., போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் மட்டும், வார்டு ஒதுக்கீடு முடிவாகவில்லை. ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், 9 இடங்களும், 11 ஊராட்சித் தலைவர் பதவிகளும் மா.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்திய கம்யூ., கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை. கோவை மாநகராட்சியில் இந்தக் கட்சியின் சார்பில், 31 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், குறைந்தபட்சம் 15 வார்டுகளாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்பதில் இக்கட்சியின் நிர்வாகிகள் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.இந்திய கம்யூ., கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், ''நாங்கள் போட்டியிட விரும்பும் வார்டுகள் குறித்த பட்டியலைக் கொடுத்துள்ளோம். ஆனால், இன்னும் எத்தனை வார்டுகள் ஒதுக்குவது என்பதே முடிவாகவில்லை. எப்படியும் நல்ல முறையில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறோம்,'' என்றார்.ஒரு வேளை உடன்பாடு ஏற்படாதபட்சத்தில், இந்த 31 வார்டுகளிலும் இந்திய கம்யூ., கட்சி போட்டியிடும் வாய்ப்புள்ளது. போட்டியிடாத வார்டுகளிலும், மேயர் பதவிக்கும் யாரை ஆதரிப்பது என்பது பற்றி கட்சி கூடி முடிவு செய்யுமென்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். தே.மு.தி.க., மாநகர் மாவட்டச் செயலாளர் தமிழ்முருகனிடம் கேட்டபோது, ''எங்களால் எவ்வளவு வார்டு ஒதுக்க முடியுமென்பதைத் தெளிவாகக் கூறி விட்டோம். அடுத்த கட்டமாக, அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை; வந்தால் பேசுவோம். எந்த உடன்பாடும் ஏற்படாவிட்டால், என்ன செய்வது என்பதை எங்களது கட்சித்தலைமை முடிவு செய்யும்,'' என்றார்.


