ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : 'சிவானந்தாகாலனி டாங்க் ரோட்டில் வரயிருக்கும் டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த வேண்டும்' என சிவானந்தாகாலனி குடியிருப்போர் நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள மனுவின் விபரம்: கோவை, சிவானந்தாகாலனி டாங்க் ரோடு மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில், அருகருகே விநாயகர் கோவில், தனியார் மருத்துவமனை, கிறிஸ்தவ ஆலயம், இரண்டு கல்யாண மண்டபம், பல அடுக்கு மாடி குடியிருப்புகள் என முற்றிலும் குடியிருப்பு பகுதிகளாக டாங்க் ரோடு உள்ளது. டாங்க் ரோடும், வள்ளுவர் வீதியும் சந்திக்கும் இடத்தில் '55 சி' எண்ணுள்ள டாஸ்மாக் கடை வரயிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த இடம் ஆபத்தான வளைவு சாலை என்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், புதியதாக டாஸ்மாக் கடை கொண்டு வந்தால், எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்கள் ஏற்படும். குடியிருக்கும் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதகமாக அமையும். குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். புதியதாக கொண்டு வரப்படும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத சூழ்நிலையை அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


