சமச்சீர் கல்வி புத்தகங்களுடன் வகுப்புகள் துவங்கின
சமச்சீர் கல்வி புத்தகங்களுடன் வகுப்புகள் துவங்கின
சமச்சீர் கல்வி புத்தகங்களுடன் வகுப்புகள் துவங்கின

சென்னை : சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் நேற்று வகுப்புகள் துவங்கின.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பின், பள்ளிகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த ஒரு வாரமாக, பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வந்தன. பள்ளிகளில், கடந்த இரு நாட்களாக, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. நேற்று முன்தினம் புத்தகங்களை பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்கு, நேற்று காலை வகுப்புகள் துவங்கியதும் வழங்கப்பட்டன.இரண்டரை மாத இழுபறிக்குப் பின், பாடப் புத்தகங்கள் கிடைத்ததைக் கண்டு, மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், வகுப்புகளும் நேற்றே துவங்கின. அரசு பாடப் புத்தகங்கள் வழக்கமாக, கறுப்பு-வெள்ளையில் அச்சிடப்படும். புத்தகங்களில், கலர் படங்களோ, முக்கியமான கண்டுபிடிப்புகள், முக்கிய நபர்கள் குறித்த வாழ்க்கை குறிப்புகள் போன்றவை தனி கட்டமிட்டோ இருக்காது. மொத்தத்தில், மாணவர்களை ஈர்க்கும் வகையில், பாடப் புத்தகங்கள் இருக்காது.
ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மாணவர்களை ஈர்க்கும் வகையில், கலரில் அச்சிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்களை ஆய்வு செய்து, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அறிவியல் அறிஞர்கள், முக்கிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முக்கிய கருத்துகள் உள்ளிட்டவை எல்லாம், 'பாக்ஸ்' செய்தியைப் போல், ஒவ்வொரு பக்கத்திலும் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாடப் புத்தகத்தின் வடிவமைப்பும் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், பாடப் புத்தகங்களைக் கண்டு, மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காலாண்டுத் தேர்வு எப்போது?வகுப்புகள் துவங்கிவிட்டாலும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, கூறப்படுகிறது.காலாண்டுத் தேர்வுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால், ஒவ்வொரு பாடத்திலும் சில பகுதிகள் மட்டும், காலாண்டுத் தேர்வுக்காக ஒதுக்கப்பட உள்ளன.