Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் ஆடித்திருவிழா ஆலோசனைக் குழு அமைப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே மோதல்

சேலத்தில் ஆடித்திருவிழா ஆலோசனைக் குழு அமைப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே மோதல்

சேலத்தில் ஆடித்திருவிழா ஆலோசனைக் குழு அமைப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே மோதல்

சேலத்தில் ஆடித்திருவிழா ஆலோசனைக் குழு அமைப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே மோதல்

ADDED : ஜூலை 12, 2011 12:35 AM


Google News

சேலம் : சேலம், மேட்டுத்தெரு, சித்திரைக்கல் மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழாவுக்கு, ஆலோசனைக் குழு அமைப்பது தொடர்பாக, அ.தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டதால், கால்கோள் விழா நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கால்கோள் விழா கடந்த 4ல் நடந்தது. தொடர்ந்து, பிற மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவுக்கான கால்கோள் விழாக்கள் நடந்து வருகிறது. சேலம், மேட்டுத்தெரு சித்திரைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கான கால்கோள் விழா நடத்துவதற்கு முன், கோவில் நிர்வாகத்தின் சார்பில் திருவிழா ஆலோசனைக் கமிட்டி அமைக்கப்படும். நிர்வாகிகள் இந்த பட்டியலில் அ.தி.மு.க.,வினர் இடம் பெற முயற்சி மேற்கொண்டனர். அதில், ஏற்கனவே திருவிழா நடத்திய முருகேஷ் என்பவருக்கும், மேட்டு தெருவை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ரெங்கன் என்பவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.



இந்த பிரச்னையை, 29வது வார்டு அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன், தலைமையில் மாவட்ட செயலாளர் செல்வராஜிடம் கொண்டு சென்றனர். மாவட்ட செயலாளரோ வார்டு செயலாளர் ராஜேந்திரன் பரிந்துரைக்கும் நபருடன் அ.,தி.மு.க.,வினர் இணைந்து திருவிழா நடத்தும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி கால்கோள் விழா நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்காக அதிகாரிகளும், பொதுமக்களும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் கால் கோள் விழா நடத்தாமல் சென்று விட்டனர். 8ம் தேதி காள் கோல் விழா நடத்த முயற்சி மேற் கொண்ட போதும், மோதல் போக்கு தொடர்ந்தால் விழா நடத்தாமல் தவிர்க்கப்பட்டது.



அ.தி.மு.க.,வினர் இடையே பதவியை பிடிப்பதில் ஏற்பட்டுள்ள சண்டையால், திருவிழாவுக்கான கால்கோள் விழா நிறுத்தப்பட்டிருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கோவில் திருவிழாவை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அ.தி.மு.க., வார்டு செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: திருவிழா ஆலோசனைக் குழுவில், முருகேஷ் என்பவரை சேர்க்க இயலாது என, அதிகாரிகளே தெரிவித்து விட்டனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ரங்கனை குழுவில் இடம் பெற செய்வது குறித்து, மாவட்ட செயலாளர் செல்வராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் ஆலோசனைப்படி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் கூறியதாவது: திருவிழா ஆலோசனை குழு அமைப்பதில் பிரச்னைகள் இருந்தது. பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 15ம் தேதி கால்கோள் விழா நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us