Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சி வாக்குப்பதிவில் 1,200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி

தூத்துக்குடி மாநகராட்சி வாக்குப்பதிவில் 1,200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி

தூத்துக்குடி மாநகராட்சி வாக்குப்பதிவில் 1,200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி

தூத்துக்குடி மாநகராட்சி வாக்குப்பதிவில் 1,200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி

ADDED : செப் 28, 2011 12:42 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பணியில் 1200 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி செய்ய உள்ளனர்.

ஒரு வாக்குச்சாவடியில் 5 பேர் பணியில் இருப்பர் என்று தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று மிக விறுவிறுப்பாக நடந்தது. இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு முன்பாக இருசக்கர வாகனங்களின் ஏராளமாக நின்றன. அதிர்வேட்டுகள், மேள,தாளம் முழங்க மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி 55வது வார்டில் அதிமுக வேட்பாளராக எஸ்.கே. மாரியப்பன் தேர்தல் அதிகாரி காந்திமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டில் அதிமுக வேட்பாளர் கித்தேரியம்மாள் தேர்தல் அதிகாரி மாநகராட்சி இன்ஜினியர் ராஜகோபாலனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போது கவுன்சிலராக உள்ள இவர் இரண்டாவது முறையாக தற்போது போட்டியிடுகிறார். இவரது கணவர் எட்வின்பாண்டியன் பத்து ஆண்டுகள் கவுன்சிலராக பணியாற்றியவர்.



இதே போல் நேற்று மாநகராட்சி வார்டுகளுக்கு அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ததால் மாநகராட்சி அலுவலகம் கடும் பிசியாக காணப்பட்டது. போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்குப்பதிவில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆயிரத்து 200 பேருக்கு மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது; தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைத்து பணிகளும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு அன்று பணி செய்யக் கூடிய ஊழியர்களுக்கு அக்டோபர் 1, 8, 14ம் தேதிகளில் மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன. மொத்தம் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டாலும் 240 வாக்குச்சாவடிகள் இருக்கும் வகையில் பணியாளர்களை தேர்வு செய்து பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 240 வாக்குச்சாவடி கணக்கிற்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் வீதம் ஆயிரத்து 200 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பங்கேற்பர். இந்த பயிற்சியின் போது எந்த முறையில் வாக்குப்பதிவின் போது பணியாற்ற வேண்டும் என்கிற முழு விபரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். இந்த பயிற்சி தூத்துக்குடி மாநகராட்சி சத்திரம் தெரு திருமண மண்டபத்தில் நடக்கும்.

பயிற்சிக்கான தகவல் நாளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். மாநகராட்சி தேர்தலை சுமூகமான முறையில் சிறு பிரச்னைக்கு கூட இடம் தராத வகையில் நடத்தி முடிப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us