கதிர் இன்ஜினியரிங் கல்லூரியில் "கலா கிருதா -2011' கலை விழா
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியில் "கலா கிருதா -2011' கலை விழா
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியில் "கலா கிருதா -2011' கலை விழா
ADDED : ஆக 20, 2011 06:36 PM

கோவை: கதிர் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான 'கலா கிருதா -2011' கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
கலை போட்டிகள் துவக்க விழாவில், கல்லூரி தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர், முதல்வர் துரைசாமி முன்னிலை வகித்தனர். இணைச்செயலர் மேனகா செந்தில்குமார் வரவேற்றார். போட்டிகளை துவக்கி வைத்து, 'சிறுதுளி' அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் பேசியதாவது: பள்ளி பருவத்தில் உள்ள குழந்தைகள், சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும். மரம் வளர்க்கவும், சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் வசதி படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கோவை அருகே சவும்யா என்ற மாணவி, 100 மரக்கன்றுகளை நட்டு பராமரித்துள்ளார். இதே போன்று, எல்லோரும் மரங்களை வளர்த்தால், சுற்றுச் சூழல் மேம்படும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 80வது பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி, கோவையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை அவருக்கு பரிசாக அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. புவியில் உள்ள இயற்கை வளங்களை எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். அவர்களும் தூய்மையான காற்று, நிலம், நீரை அனுபவிக்க வேண்டும். மாசுபட்டாலும், அதை சுத்திகரித்து வருங்கால சந்ததியினருக்கு சொத்தாக சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு, வனிதா மோகன் பேசினார்.
கதிர் இன்ஜினியரிங் கல்லூரி செயலாளர் லாவண்யா கதிர் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவியருக்கு திறன் வளர்ப்பு, போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கதிர் கல்லூரியில் நடத்தி வருகிறோம். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை, 'கலாகிருதா' என பெயரிட்டு நடத்தி வருகிறோம். கோவை மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, திருப்பூர், கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், கோவையை சுற்றிலும் உள்ள பல்லடம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவ்வாறு, கல்லூரி செயலாளர் லாவண்யா கதிர் தெரிவித்தார்.