Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூரில் ஜெ., வருகைக்கான ஆயத்தப் பணிகள் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க துவங்கியது

திருவள்ளூரில் ஜெ., வருகைக்கான ஆயத்தப் பணிகள் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க துவங்கியது

திருவள்ளூரில் ஜெ., வருகைக்கான ஆயத்தப் பணிகள் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க துவங்கியது

திருவள்ளூரில் ஜெ., வருகைக்கான ஆயத்தப் பணிகள் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க துவங்கியது

ADDED : செப் 09, 2011 02:03 AM


Google News

திருவள்ளூர் : அண்ணாதுரை பிறந்த நாளான வரும் 15ம் தேதி திருவள்ளூரில் பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.

இதற்கான ஆயத்தப் பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை வழங்கப்படும் என, சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்றதும் வரும் செப்டம்பர் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளன்று இலவச பொருட்கள் வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



இப்பொருட்களை அரசு கொள்முதல் செய்ய டெண்டரும் விடப்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார். பணிகள் தீவிரம்: இதற்கான ஆயத்தப் பணிகளில் அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் தங்குவதற்காக திருமண மண்டபங்களை மாவட்ட போலீசார் வாடகைக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில், இலவச பொருட்களை பெறும் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



விழா மேடை: இதற்கான விழா மேடையை எங்கு அமைப்பது என்பது குறித்து, மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ரமணா, சிறப்பு திட்ட அமலாக்க துறை செயலர் சம்பத், மாவட்ட எஸ்.பி., வனிதா மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை திருவள்ளூருக்கு வந்து ஆய்வு செய்தனர். இவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் விளையாட்டு மைதானம், ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., மைதானம் மற்றும் திருத்தணி சாலையில் உள்ள விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.



முடிவில் காக்களூர் விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டது. அதன் பின்புறம் உள்ள பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்க வசதியாக தளம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து விழா மேடை அமைக்க நேற்று காலை 6 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ரமணா, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை செயலர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி., வனிதா கூறும் போது, ''பழைய கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்கான மேடை அமைக்கப்பட உள்ளது. விழா மேடை அமைக்கும் இடத்தில் இரவு, பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.



என்.ஆனந்தன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us