/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜி மந்திரியின் உதவியாளரால் உயிருக்கு ஆபத்து : தொழிலதிபர் கலெக்டரிடம் கண்ணீர்மாஜி மந்திரியின் உதவியாளரால் உயிருக்கு ஆபத்து : தொழிலதிபர் கலெக்டரிடம் கண்ணீர்
மாஜி மந்திரியின் உதவியாளரால் உயிருக்கு ஆபத்து : தொழிலதிபர் கலெக்டரிடம் கண்ணீர்
மாஜி மந்திரியின் உதவியாளரால் உயிருக்கு ஆபத்து : தொழிலதிபர் கலெக்டரிடம் கண்ணீர்
மாஜி மந்திரியின் உதவியாளரால் உயிருக்கு ஆபத்து : தொழிலதிபர் கலெக்டரிடம் கண்ணீர்
ADDED : ஆக 02, 2011 01:04 AM
சேலம்: மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் மிரட்டலால், டெக்ஸ்டைல் நிறுவன பங்குத்தொகை, இரண்டரை கோடி ரூபாயை இழந்து விட்டதாக, தொழிலதிபர் ஒருவர், கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் சிந்தாமணியூரைச் சேர்ந்தவர் வெங்கடப்பன். அவருக்கு லட்சுமிஸ்ரீ என்ற மனைவியும், வெங்கடேஸ்வரி, மாலஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர், கொண்டலாம்பட்டியில் உள்ள நாகிசெட்டி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், 1990ம் ஆண்டு பங்குதாரராக சேர்ந்தார். நாகிசெட்டி, சரஸ்வதி, நடராஜன், பிரேமா, சண்முகசுந்தரம், ரமேஷ், விஜயானந்த், மணி, சரவணன், அண்ணாமலை, கமலா, ஜெயகோபி, கிருஷ்ணமூர்த்தி, குருராஜன் உள்ளிட்ட, 14 பேர் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். அவர்கள் வெங்கடப்பனை, 20 சதவீதம் பங்குதாரராக சேர்த்து, நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டனர். அதன்பின், சேலம் குகை பகுதியில் நான்கு கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு கம்பெனியிலும் அவரை, 20 சதவீத பங்குதாரராக ஆக்கினர். ஆனால், 1996ல் வெங்கடப்பன் விலகி விட்டதாக, பொய்யான ஆவணங்கள் தயாரித்து, போலி கையெழுத்து மூலம் அவரை வெளியேற்றினர்.
இது தொடர்பாக, வெங்கடப்பன், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் இருந்து, வெங்கடப்பனுக்கு இரண்டரை கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது. பொய்யான ஆவணங்களை ஆய்வு செய்த, சென்னை தடவியல் துறையினர், 2005ல் போலி கையெழுத்து போடப்பட்டதை உறுதி செய்தனர். அப்போதைய, துணை கமிஷனர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் பூலாவாரி சேகர், நாகிசெட்டி நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து, வெங்கடப்பனை மிரட்டியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக, பங்குத்தொகையை பெற முடியாமல் வெங்கடப்பன் தவித்துக் கொண்டிருந்தார்.
ஆட்சி மாற்றத்துக்கு பின், மோசடி குறித்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் உதவியாளர் சேகரால், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், குடும்பத்தினரை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதில் கூறியுள்ளார். தொடர்ந்து, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம், வெங்கடப்பன் நேற்று புகார் மனு அளித்தார். தனக்கும், குடும்பத்துக்கும் மாஜி மந்திரி உதவியாளரால் ஆபத்து உள்ளதாக, கண்ணீருடன் தெரிவித்தார்.