விலங்குகளை பாதுகாக்க மின்வேலி அமைப்பு
விலங்குகளை பாதுகாக்க மின்வேலி அமைப்பு
விலங்குகளை பாதுகாக்க மின்வேலி அமைப்பு
ஆத்தூர் : 'ஆத்தூர் வனக்கோட்ட பகுதியில், வனவிலங்குகள் வெளியேறாமல் இருக்க, 7.5 கி.மீ., தூரம், மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது' என, ஆத்தூர் வனக்கோட்ட அலுவலர் நாகநாதன் தெரிவித்தார்.
கல்வராயன்மலை பகுதியில் உள்ள கிராமங்களில், புளிச்ச கீரை, கடலை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில், தண்ணீர் மற்றும் இரை தேடி வரும் வனவிலங்குகள் புகுந்து, சேதத்தை ஏற்படுத்தின. அதனால், 'விளை நிலங்களில் விளைவிக்கும் தானியங்களை பாதுகாக்கும் வகையில், மின்வேலி அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் மற்றும் வனக்குழுவினர், மத்திய, மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஆத்தூர் வனக்கோட்டத்தில், 7.5 கி.மீ., தூரம், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்வேலி அமைக்கப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் வனக்கோட்ட அலுவலர் நாகநாதன் கூறியதாவது: ஆத்தூர் வனக்கோட்டத்தில், 610 சதுர கி.மீ., தூரம், வனப்பகுதிகள் உள்ளன. அதில், ஆறு வனச்சரகத்தில், 77 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும், சமூக காடுகளும் உள்ளது. மூன்று மாதத்தில், தண்ணீர் மற்றும் இரை தேடி சென்ற மூன்று புள்ளி மான்களும், கடந்தாண்டில் எட்டு மான்களும் உயிரிழந்தன.
ஆத்தூர் வனச்சரகம் சிலோன் காலனி பகுதியில், 2 கி.மீ., தூரமும், வாழப்பாடி வனச்சரகம் கணேசபுரத்தில், 3 கி.மீ., தூரமும், நெய்யமலையின் பட்டிமேடு வனப்பகுதியில், 2.5 கி.மீ., தூரம், என, 7.5 கி.மீ., தூரம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதனால், வன விலங்குகள் வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.