Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கழிவுநீரை கண்ட இடத்தில் கொட்டினால் சிறை : அத்துமீறும் லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கழிவுநீரை கண்ட இடத்தில் கொட்டினால் சிறை : அத்துமீறும் லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கழிவுநீரை கண்ட இடத்தில் கொட்டினால் சிறை : அத்துமீறும் லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கழிவுநீரை கண்ட இடத்தில் கொட்டினால் சிறை : அத்துமீறும் லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

ADDED : செப் 04, 2011 09:36 PM


Google News

தாம்பரம் : ஆள்நடமாட்டம் இல்லாத சாலையோரங்கள், ஏரி, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் உட்பட, இஷ்டப்பட்ட இடங்களில், செப்டிக் டேங்க் உட்பட நச்சு கழிவுநீரை கொட்டும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியில், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது; செப்டிக் டேங்க் கழிவுநீரை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செப்டிக் டேங்க் உட்பட, நச்சுத் தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டிக்குள், மனிதர்கள் இறங்கி, சுத்தம் செய்வதை தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், புறநகரில் பரவலாக கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதும், இதன் மூலம், உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும், செப்டிக் டேங்க் கழிவுநீர் உட்பட அதிக நச்சுத் தன்மை கொண்ட கழிவுநீரை அடையாறு ஆற்றிலும், பல்லாவரம் பெரிய ஏரி உள்ளிட்ட சில நீர்நிலைகளிலும் தனியார் லாரி உரிமையாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த இரு விஷயங்கள் தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில், மீண்டும் ஒரு விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும், அத்துமீறும் தனியார் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது, போலீசார் மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி நிர்வாக துறை மூலம் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 'குடியிருப்புகள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கு, முதலில் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்; தனியார் லாரிகள் கழிவுநீர் தொட்டியின் 'மேன்ஹோல்' அடைப்புகளை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் போது, அந்த உள்ளாட்சியின் சுகாதார ஆய்வாளர் உடன் இருக்க வேண்டும்; காப்பீடு செய்யப்பட்டுள்ள பணியாளர்களை மட்டுமே, இத்தகைய பணியில் ஈடுபடுத்த வேண்டும்; அவர்களுக்கு தகுந்த கவசங்கள் வழங்க வேண்டும்; கழிவுநீர் லாரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்; வட்டார போக்குவரத்து அதிகாரி மூலம், கழிவுநீர் லாரி சிறப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்; எடுக்கப்பட்ட கழிவுநீரை நிலம், நீர், காற்று மாசுபடாத வகையில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும்; மீறும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அச்சடித்த நோட்டீஸ் பொதுமக்களிடம் வினியோகிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாக துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தமிழக அரசின் உத்தரவின்படி, கழிவுநீர் அகற்றும் விஷயத்தில் மிகுந்த கண்டிப்புடன் செயல்பட பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் லாரிகள் உரிய அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதிகளுக்குள் வரவே கூடாது. பெருங்குடி, ஆலந்தூர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும். அத்துமீறிய லாரிகள் மீது, கடந்த காலங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில லாரி உரிமையாளர்கள், நீர்நிலைகளில் கழிவுநீரை கொட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, பொதுமக்கள் தகவல் தரலாம். கையும் களவுமாக பிடிபடும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். டிரைவர் மற்றும் ஓட்டுனர்கள் மீது போலீசார் மூலம், கைது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us