டில்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் மெத்தனம் காட்டுவதா?
டில்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் மெத்தனம் காட்டுவதா?
டில்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் மெத்தனம் காட்டுவதா?

புதுடில்லி : பார்லிமென்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில், டில்லி போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த 2008ம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், இந்த முடிவை எடுத்தன. இதையடுத்து, மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க, பா.ஜ., எம்.பி.,க்களான அசோக் அர்கல், பாகன்சிங் குலாஸ்தே மற்றும் மகாவீர் பாகோரா ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அந்தப் பணத்தை, 2008 ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் காட்டி, புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை தொடர்பாக, லோக்சபா செயலர் கொடுத்த புகாரின்படி, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருந்தும், மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் லிங்டோ, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது: பார்லிமென்டில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, பா.ஜ., எம்.பி.,க்கள் மூன்று பேருக்கு லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பணத்தை, பார்லிமென்டில் காட்டினர். இதை நாடு முழுவதும் உள்ள மக்களும், 'டிவி'யில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரத்தில், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, டில்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பார்லிமென்ட் கூட்டுக் குழு தலைவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கொடுத்த இந்த விவகாரத்தை விரைவாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, அரசை கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி அப்டாப் ஆலம் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணையில், டில்லி போலீசார் மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர். இது சரியல்ல. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்து, காவலில் வைத்து விசாரணை நடத்தாதது ஏன்? இந்த வழக்கில் டில்லி போலீசாரின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், போலீசார் இப்படி மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வது சரியல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், வழக்கு விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்துள்ள அறிக்கை, விசாரணை அறிக்கையே அல்ல. யாரோ சிலர் தெரிவித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை.
லோக்சபா செயலர் புகார் கொடுத்தும், போலீசார் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். எனவே, அடுத்த இரண்டு வாரத்திற்குள், இந்த வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.