PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM

இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா பேட்டி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பின், ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. ரயில்வே துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி விபத்துகளை குறைக்க வேண்டும்.
மத்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் பேச்சு: உயர் தொழில்நுட்ப வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட பின், இந்தியாவுடன் வழக்கமாக மேற்கொள்ளப்படும், துறைகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. மாறாக ஆராய்ச்சி, மேம்பாடு, பொருள் வடிவமைப்பு, வர்த்தக ரீதியில் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அளிப்பதில் தேக்க நிலை நிலவுகிறது.
மத்திய இளைஞர் நலன் துறை அமைச்சர் அஜய் மக்கான் பேச்சு: இந்தியாவின் மக்கள் தொகை இன்னும், 14 ஆண்டில் சீனாவை விட அதிகமாகும். வரும், 2020ம் ஆண்டில், இந்தியர்களின் சராசரி வயது, 29 ஆண்டு என இருக்கும். அதாவது, இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாகும்; இந்த வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: சமீப காலமாக நாடு முழுவதும் வறட்சி, விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை போன்ற பல காரணங்களால், மன உளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாகி தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. தேவையற்ற பல செலவுகளுக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வாரி இறைக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன் தொகையை தள்ளுபடி செய்து நிவாரணம் அளிப்பதே, அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை காப்பாற்ற உதவும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மத்திய அரசால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. இந்நிலையில், மாநில அரசும், அதன் பங்கிற்கு வரிகளை உயர்த்தினால், அதை ஏழை எளிய மக்களால், தாங்கிக் கொள்ள முடியாது. அதுவும் அடுத்த மூன்று வாரங்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அவசரமாக கொள்ளைப்புற வழியாக வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:சோனியாவை நாட்டை விட்டு துரத்தினால் தான் நாடு நல்ல நிலைக்கு வரும்; இல்லையென்றால் குட்டிச்சுவராகி விடும்.