Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தயாரிக்கும்தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தயாரிக்கும்தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தயாரிக்கும்தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தயாரிக்கும்தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ADDED : ஆக 22, 2011 02:42 AM


Google News
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே மரக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மரக்கழிவுகள் எரிந்து சாம்பலாயின.சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை செல்லும் ரோட்டில் சண்முகாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கருவேல மரம், மக்காசோளம், மர அறுவை ஆலைகளில் உள்ள கழிவு, கார்போர்டு, தீப்பெட்டி குச்சி போன்ற மரக்கழிவுகளை எரிப்பதின் மூலம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதன் மூலம் பெறப்படும் நீராவியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் தற்போது சோதனை முறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான டன் மரக்கழிவுகள் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கழிவுகளின் ஒரு பகுதியில் தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மேலும் பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ மேலும் பரவியது. இதனால் கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இதனால் மாவட்ட தீயணைப்பு அதிகாரி பத்மகுமார், மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி குமரேசன் ஆகியோர் தொழிற்சாலையில் முகாமிட்டு தீ மேலும் பரவாமல் கண்காணித்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான டன் மரக்கழிவுகள் தீ விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 22 ஆயிரம் டன் மரக்கழிவுகள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கு வெல்டிங் செய்யும் போது தீப்பொறி பறந்ததாலோ அல்லது இயந்திரங்களை இயக்கிய போது தீப்பொறி பறந்ததாலோ மரக்கழிவுகளில் தீ பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டாலும் மரக்கழிவுகளில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தனியார் மின்சார தயாரிப்பு தொழிற்சாலையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us