
மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேச்சு : அனைத்து பிரச்னைகளையும் மக்களின் நலன் கருதி, சட்டப்படி அணுக திட்டமிட்டுள்ளேன்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: அன்னிய பொருட்களின் இறக்குமதியால், உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. இதனால், விவசாயத்தை சார்ந்துள்ள வணிகர்களின் வாழ்வும் சின்னாபின்னமாகியுள்ளது.
திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பேட்டி: பெரிய நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபத்தில், ஒரு பகுதியை சமூக நலத்திட்டங்களுக்கு செலவிடுவதை கட்டாயமாக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. தாமாக முன் வந்து, நிறுவனங்கள், சமூக நல பணிகளுக்கு அதிக தொகை செலவிடுவதால், அவற்றை சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தக் கூõடது என நிறுவனங்கள் கூறுகின்றன; கட்டாயப்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை.
சமூக ஆர்வலர் கேஜரிவால் பேட்டி: ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டால், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை ஹசாரே கைவிடுவார். இப்போது, அரசு கொண்டு வர உள்ளது லோக்பால் இல்லை; அது வெறும், 'ஜோக்பால்' தான்.
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பேட்டி: மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க முன் வரும் பட்சத்தில், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத் தலைவர் பொன்குமார் அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அரசுக்கு கடன் சுமை வைத்து விட்டதாக, தி.மு.க., அரசு மீது, குறை கூறுவதே வாடிக்கையாகி விட்டது. நலத் திட்டங்கள் நிறுத்தம், பணியாளர்கள் சலுகை பறிப்பு போன்ற செயல்களில் அ.தி.மு.க., அரசு ஈடுபடுவது தொடர் கதையாகி விட்டது. இது, அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த மக்களுக்கு, இந்த அரசு அளிக்கும் தண்டனை.
மா.கம்யூ., பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேட்டி: நிலம் கையகப்படுத்துவது என்பது, ஒரு சிக்கலான பிரச்னை. காலனி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் தான், தற்போதும் நடை முறையில் உள்ளது; இந்த சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும்.