சென்னை போலீசில் வருகிறது அதிரடி மாற்றம்
சென்னை போலீசில் வருகிறது அதிரடி மாற்றம்
சென்னை போலீசில் வருகிறது அதிரடி மாற்றம்
சென்னை : சென்னையில் அமையவுள்ள பெருநகர போலீஸ் கமிஷனரக திட்டத்தின் கீழ், மத்திய குற்றப்பிரிவுகளும் இணைக்கப்பட உள்ளன.
புறநகர் போலீஸ் கமிஷனராக ஐ.ஜி.,யாக இருந்த ஜாங்கிட் நியமிக்கப்பட்டார். பரங்கிமலை, மாதவரம், அம்பத்தூர் காவல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு தனியாக மூன்று துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புறநகர் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை போலீசில் உள்ளது போல், மத்திய குற்றப்பிரிவும் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.,யாக ஜாங்கிட் பதவி உயர்வு பெற்றபோதும், புறநகர் கமிஷனராகவே நீடித்தார். தேர்தலின் போது ஜாங்கிட் மாற்றப்பட்டு, கரன் சின்கா கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது, அவரும் மாற்றப்பட்டு ராஜேஷ்தாஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் வேப்பேரியில் துவக்கப்பட்ட போதே, புறநகரும் இதனுடன் மீண்டும் இணைக்கப்படுவதாக பேச்சு எழுந்தது. இந்த பேச்சுக்கு தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் செயல்வடிவம் கிடைத்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை, விரைவில், 'கிரேட்டர் சென்னை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாநகராட்சி எல்லை விரிவடைந்து, சென்னையை சுற்றியுள்ள நகராட்சிகள் சில சென்னை மாநகராட்சியில் இணைய உள்ளன.
அதே நேரத்தில், சென்னை போலீஸ் மட்டும் இரண்டாக பிரிந்திருந்தால், நிதி ஆதாரம், குற்றத் தடுப்பு, நவீனப்படுத்துதல் போன்றவற்றில் பிரச்னை எழும் என்பதால், இரண்டும் ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் பட்சத்தில், சென்னை பெருநகர கமிஷனரகத்தில் ஏற்கனவே இருந்த மூன்று மண்டலங்களுடன், மேற்கு மண்டலம் புதிதாக உருவாக்கப்படுகிறது.
இதனால், சென்னை போலீஸ் நிர்வாகத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் இருக்காது என்றாலும், கூடுதல் பணியிடங்கள் இதில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, சென்னை போலீசில் உள்ள வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்களும், மத்திய மண்டலத்தில் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களும், தெற்கு மண்டலத்தில் மயிலாப்பூர், தி.நகர், அடையாறு காவல் மாவட்டங்களும் உள்ளன.
அதே போல், சென்னை புறநகர் போலீசில் மவுன்ட், அம்பத்தூர் மற்றும் மாதவரம் காவல் மாவட்டங்கள் உள்ளன. இந்த காவல் மாவட்டங்கள் அனைத்தும் துணை கமிஷனர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. சென்னை போலீசில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் டி.ஐ.ஜி., அந்தஸ்தில் இணை கமிஷனர்களும், சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து போலீசிற்கு தனித்தனியான ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள கூடுதல் கமிஷனர்களும் தற்போது பணியில் உள்ளனர். புறநகர் போலீசில், காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் நேரடியாக கமிஷனர் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
தற்போது புதியதாக ஒரு மண்டலம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு புதிய இணை கமிஷனர் நியமிக்கப்பட உள்ளார். அதே நேரத்தில், போக்குவரத்து போலீசில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.
பெருநகர போலீஸ் கமிஷனரக திட்டத்தின்படி, தெற்கு மண்டலத்தில் அடையாறு, தி.நகர், மவுன்ட் காவல் மாவட்டங்களும், மத்திய மண்டலத்தில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம் காவல் மாவட்டங்களும், புதிதாக உருவாகும் மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு, அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் காவல் மாவட்டத்ததில் வருவதாக கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவும் இணைகிறது
நமது சிறப்பு நிருபர்