/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நில மோசடியில் "கிடு கிடு'க்குது காஞ்சி விசாரிக்க முடியாமல் போலீசார் திணறல்நில மோசடியில் "கிடு கிடு'க்குது காஞ்சி விசாரிக்க முடியாமல் போலீசார் திணறல்
நில மோசடியில் "கிடு கிடு'க்குது காஞ்சி விசாரிக்க முடியாமல் போலீசார் திணறல்
நில மோசடியில் "கிடு கிடு'க்குது காஞ்சி விசாரிக்க முடியாமல் போலீசார் திணறல்
நில மோசடியில் "கிடு கிடு'க்குது காஞ்சி விசாரிக்க முடியாமல் போலீசார் திணறல்
ADDED : ஜூலை 27, 2011 03:01 AM
காஞ்சிபுரம் : ''காஞ்சிபுரம் மாவட் டத்தில், நில மோசடியில் ஈடுபட்ட, எட்டு பெண்கள் உட்பட 60 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, கூடுதல் எஸ்.பி.,(குற்றம்) பாஸ்கரன் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, மாவட்டங்கள்தோறும், தனிப்பிரிவு துவக்க, முதல்வர் உத்தரவிட்டார்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மாதம் தனிப்பிரிவு துவக்கப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவுடன் இணைக்கப்பட்டது. புகார் மனுக்களைப் பெற, எஸ்.பி., அலுவலக நுழை வாயிலில், பெண் போலீஸ் ஒருவர் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டார்.
தனிப்பிரிவு துவக்கப்பட்ட நாளிலிருந்து, எஸ்.பி., அலுவலகத்திற்கு, புகார் மனுக்கள் வந்தபடி உள்ளன. புகார் கொடுக்க வருபவர்களுடன், நான்கைந்து பேர் வருவதால், எஸ்.பி., அலுவலகத்தில், எப்போதும், கூட்டம் நிரம்பி வழிகிறது.கூடுதல் எஸ்.பி.,(குற்றம்) பாஸ்கரன் கூறியதாவது:மாவட்டத்தில், கடந்த மாதம் முதல் தேதியிலிருந்து, நேற்று வரை 300 புகார் மனுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே, 111 மனுக்கள் நிலுவையில் இருந்தன. மனுக்களை விசாரிக்கும் பணியில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவ, கூடுதலாக 37 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 37 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.நில மோசடி தொடர்பானப் புகார்களை, மிகவும் நுணுக்கமாக விசாரிக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரும், ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். அவற்றை கவனமாக படிப்பதுடன், பத்திரப்பதிவுத் துறை, வருவாய் துறை அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று, உண்மை விவரத்தை அறிந்த பின்னரே, மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் சற்று காலதாமதமாகிறது.இது வரை வந்த மனுக்களில், 25 மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நில மோசடியில் ஈடுபட்ட, எட்டு பெண்கள் உட்பட 60 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த நான்கு ஊராட்சி தலைவர்கள் மீது, நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. மனுவை விசாரித்தபின் தகவல் தெரிவிக்கிறோம்.இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்.
ஐவர் கைது : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில மோசடி தொடர்பானப் புகார்கள், குவிந்தபடி உள்ளன. நேற்று, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் ரயில் நகரை சேர்ந்தவர் நிர்மலா தேவி,70. இவருக்கு, கூடுவாஞ்சேரி டிபன்ஸ் காலனியில், 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,692 சதுர அடி நிலம் இருந்தது.அந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பன், 64, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த, ஓட்டல் உரிமையாளர் மகேஷ், 29, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்துள்ளனர். நிர்மலாதேவி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் கன்னியப்பன், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.அனகாபுத்தூரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி, 35. இவரது தந்தைக்கு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சாலமங்களம் கிராமத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,680 சதுர அடி நிலம் இருந்தது. அதை, சென்னை கன்னம்மாள் நகரை சேர்ந்த ராஜா, 40, என்பவர் போலி ஆவணம் தயாரித்து, நில மோசடி செய்துள்ளார். சாமுண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ராஜா கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அடுத்த பூசிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யசோதா. இவருக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.45 சென்ட் நிலத்தை, அதே கிராமத்தை சேர்ந்த சிகாமணி,60, என்பவர் மோசடியாக, பரமானந்தம்,51, என்பவருக்கு விற்றுள்ளார். பரமானந்தம் கொடுத்த புகாரின்பேரில், சிகாமணி கைது செய்யப்பட்டார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முகமத்நவீர்பின்சையதுஅகமத். இவருக்கு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலி மனை இருந்தது. அதை, ராமாபுரத்தை சேர்ந்த ராஜா, நெகபாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார், 45, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, டில்லிபாபு என்பவருக்கு விற்றுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.