ரயில் விபத்து குறித்து கோட்ட மேலாளர் விசாரணை : மீட்பு பணியில் ஈடுபட்ட வாலிபர் பாம்பு தீண்டி சாவு
ரயில் விபத்து குறித்து கோட்ட மேலாளர் விசாரணை : மீட்பு பணியில் ஈடுபட்ட வாலிபர் பாம்பு தீண்டி சாவு
ரயில் விபத்து குறித்து கோட்ட மேலாளர் விசாரணை : மீட்பு பணியில் ஈடுபட்ட வாலிபர் பாம்பு தீண்டி சாவு
ADDED : செப் 16, 2011 11:32 PM
அரக்கோணம் அடுத்த, சித்தேரியில் நடந்த ரயில் விபத்து குறித்து, கோட்ட மேலாளர் அனந்தராமன் நேற்று முதல் விசாரணையைத் துவக்கினார். நேற்று காலை இரு இன்ஜின்களை அரக்கோணத்திலிருந்து, சித்தேரி வரை ஒவ்வொரு சிக்னலாக இயக்கி சோதனை நடத்தினார். இதற்கிடையே, மீட்புப் பணியில் ஈடுபட்ட வாலிபர் பாம்பு தீண்டி இறந்தார். இரு இன்ஜின்களை தொடர்ந்து, மூன்றாவது இன்ஜினில் கோட்ட மேலாளர் அனந்தராமன், ஆபரேட்டிங் மேலாளர் பாலாஜி அருண் குமார், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சிவசங்கரன், போக்குவரத்து ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் இருந்தனர். இன்ஜின்கள் ஒன்றன் பின் ஒன்றாக, சிக்னல்களைத் தாண்டிச் செல்லும் போது, தானாக ரெட் சிக்னல் விழுகிறதா என கவனித்தனர். இதே போல, மறு மார்க்கத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில், எந்த சிக்னலிலும் கோளாறு ஏற்படவில்லை . சிக்னலை இன்ஜின் தாண்டியதும், தானாக ரெட் சிக்னல் விழுந்தது. விபத்தில் இறந்த, 10 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் குடும்பத்தினரிடம், போலீஸ் எப்.ஐ.ஆர்., பிரதி, இறப்புச் சான்றிதழை, அரக்கோணம் தாசில்தார் ரவி வழங்கினார். விபத்து எப்படி நடந்தது, எப்படி நடந்திருக்கலாம், யார் தவறு செய்திருப்பார்கள் என, சித்தேரி பகுதி பொது மக்கள், ரயில்வே துறையினர், 56 பேர் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளனர். விபத்து ஏற்பட்டதால், வேலூர் கன்டோன்மென்ட்டிலிருந்து, சென்னை பீச் வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த ரயிலில், தினம் ஆயிரக்கணக்கான பொது மக்கள், அரசு ஊழியர்கள், சீசன் டிக்கெட் எடுத்து சென்னை, அரக்கோணம் சென்று வந்தனர். ரயில் நிறுத்தப்பட்டதால், இதில் பயணம் செய்தவர்கள், அதிகக் கட்டணம் செலுத்தி, மற்ற ரயில்களில் பயணம் செய்தனர். சீசன் டிக்கெட் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் நலன் கருதி, ஆவடி ரயில்வே பணிமனையிலிருந்து மாற்று யூனிட் வண்டி ஒன்று நேற்று முதல் இயக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில், முழு அளவில் தயாரானதும், மீண்டும் தன் சேவையை இந்த பாதையில் தொடரும். அது வரை, இந்த மாற்று வண்டி வழக்கமான நேரங்களில், இந்த பாதையில் இயங்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
பலி: ரயில் விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை, சித்தேரியைச் சேர்ந்த வெங்கட்ட கிருஷ்ணன்,22, மீட்ட போது, அவரை அங்கிருந்த முள் புதரில் இருந்த, கட்டு விரியன் பாம்பு தீண்டியது. மயங்கி விழுந்த அவரை, அரக்கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய வெங்கட்ட கிருஷ்ணன் நேற்று இறந்தார்.
ஒரு வாரத்தில் அறிக்கை : ரயில் விபத்து குறித்து, சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தின், 5வது மாடியில் நேற்று விசாரணை துவங்கியது. தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல், நேற்று காலை முதல் விசாரணையை துவக்கினார். டிரைவர் ராம்பாபு, உதவி டிரைவர் மூர்த்தி, வேலூர் மின்சார ரயிலின் கார்டு முருகன், ரயில்வே கேட்மேன்கள் கோவிந்தராஜ், புரு÷ஷாத்தமன், மற்றும் சித்தேரி, அரக்கோணம் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட, 23 ரயில்வே பணியாளர்களும், காட்பாடி ரயிலில் பயணித்த பயணிகள் மஞ்சு, சிவா என மொத்தம், 25 பேர் விசாரணைக்கு வந்திருந்தனர். அவர்களிடம், பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார்.
விசாரணை குறித்து, பாதுகாப்பு ஆணையர் மிட்டல் கூறியதாவது: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மின்சார ரயில் டிரைவர் ராஜ்குமாரிடம் பேசினேன். பின்னர், விபத்து குறித்து ரயில்வே ஊழியர்கள், பொதுமக்களிடம் விசாரணையை துவக்கியுள்ளேன். இந்த விசாரணை இன்றும் (17ம் தேதி) தொடரும். விபத்து நடந்த இடத்தை, நேரில் சென்று பார்வையிடவுள்ளேன். விசாரணை முடிவடைந்ததும், இன்னும் ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். விசாரணை முடிந்த பின்னரே, விபத்திற்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு, மிட்டல் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்-