"சட்டம் ஒழுங்கு கெட்டுருச்சு; சட்ட சபை புட்டுகுச்சு'- இரா.செந்தில்குமார்
"சட்டம் ஒழுங்கு கெட்டுருச்சு; சட்ட சபை புட்டுகுச்சு'- இரா.செந்தில்குமார்
"சட்டம் ஒழுங்கு கெட்டுருச்சு; சட்ட சபை புட்டுகுச்சு'- இரா.செந்தில்குமார்
PUBLISHED ON : செப் 27, 2011 12:00 AM
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தேடி மரத்துக்குச் போனபோது, வேதாளம் 'மிஸ்டு கால்' கொடுத்தது.
உடனே வேதாளத்துக்குப் போனைப் போட, மறு முனையில் போன் எடுத்த வேதாளம், ''நண்பர்களைப் பாக்குறதுக்காக சென்ட்ரல் ஜெயில் வாசல்ல காத்திருக்கேன், 'ஸோ' 'கரண்டு கட்டு' மாதிரி இன்னைக்கு 'கதை கட்டு' இன்னொரு நாள் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு 'லைனை கட்' செய்தது.
விக்கியின் இன்னோவா, சென்ட்ரல் ஜெயிலை நோக்கிப் பறந்தது. நண்பர்களைச் சந்திக்கும் ஆவலில் காத்திருந்த வேதாளத்தைத் தூக்கி, தோளில் போட்டபடி இன்னோவாவை நோக்கி நடந்தான் விக்கி. ''குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கீட்டு வந்து காலையில இருந்து, இங்க குத்த வெச்சு உக்காந்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா, 'ஆப்ட்ரால்' ஒரு 'ஸ்டோரி'க்காக, என்னை 'கிட்நாப்' பண்ணுறியே நண்பா, இது நியாயமா?
கட்சிக்காக காலம் பூரா உழைச்ச அவங்க எல்லாரும் இப்ப உள்ள இருக்காங்க. இந்த நேரத்துல நான் போய் பாக்கலேன்னா, தப்பாயிராதா? கட்சிகாரங்க என் முகத்துல காறித் துப்பிட மாட்டாங்களா?; ஏற்கனவே, திகார் ஜெயில் வரைக்கும் போக காசில்லாததால, தங்கத் தலைவரோட தவப்புதல்வியப் பாக்க முடியாம நானே தவிச்சுப் போயிருக்கிறேன்.
ஒடம்பொறப்புகளையாவது பக்கத்து ஜெயில்ல போட்டாங்களே, அந்தவரைக்கு சந்தோஷம்னு நெனைச்சுட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துரலாம்ன்னு போனேன்; அதுவும் கூட உனக்கு பொறுக்கலையா? இது மட்டும் எங்க தலைவருக்குத் தெரிஞ்சதுன்னு வை, 'சட்டம் ஒழுங்கு கெட்டுருச்சு; சட்ட சபை புட்டுகுச்சு' அப்படின்னு எதுகை மோனையில எட்டு பக்கத்துலு இந்த ஆட்சிய கலைக்கச் சொல்லி கடிதம் எழுதீருவாரு. ஏன்னா, இப்ப கூட எங்க தலைவரு சொன்னா டெல்லி கேக்கும்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு நண்பா.
உள்ளாட்சில 'கழட்டி விட்டுட்டு எந்த மூஞ்சிய வெச்சுட்டு கடிதம் எழுதுவாருன்னு நானும் கூட யோசிச்சேன். அப்பதான், செண்பகப்பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்க வந்த தருமி மாதிரி, என்னோட சந்தேகத்தைத் தீர்க்க வந்தான் ஒரு ஒடன்பிறப்பு.
அவன் என்ன தெரியுமா சொன்னான்? 'தலையாட்டுறதுல மின்மோகனுக்கு மிஞ்சுன தகுதி இருந்தும் நம்ம தலைவரு பி.எம்., பதவிய, விட்டு குடுத்தாரில்லையா? அதனால, நம்ம தலைவரு மேல மின்மோகனுக்கு தனி மருவாதி இருக்கு.
பி.எம்.,ம்னா... 'பிரை மினிஸ்டரு'ன்னு நம்ம ஜனங்க இன்னும் தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க. இந்த தேசத்துல பி.எம்.,ன்னா அர்த்தம் என்ன தெரியுமா? சேமியா மாமிக்கு 'பிடிச்ச மாதிரி மண்டைய ஆட்டுறவர்' அப்படின்னு அர்த்தம்.
சட்டமன்ற எலக்ஷன் சமயத்துல, சேமியா மாமி சொன்னதுக்கு எல்லாம், மின்மோகனை விட மிகச் சிறப்பா மண்டைய ஆட்டுனது நம்ம தலைவருதான். 'ஸோ' தலைவரு பி.எம்., பதவிக்கு, அதாம்பா.... 'பிடிச்ச மாதிரி மண்டைய ஆட்டுறவர்' பதவிக்கு வந்துட்டா என்ன பண்ணுறதுன்னு, மின்மோகன் பயந்து போயிட்டாரு.
இதனால, இதே ரேஞ்சுல நீங்க தலையாட்டுனா உங்களை பி.எம்.,ஆக்கீருவாங்க. அப்புறம் புள்ளைங்களுக்கும், மனைவி, துணைவிகளுக்கும் மண்டைய ஆட்டுறதை ஒரே முட்டா மறந்துட்டு, சேமியா மாமி சொல்லுறதுக்கு மட்டுந்தான், மண்டைய ஆட்ட முடியும். 'ஸோ' உஷார் ஆயிருங்க; உள்ளாட்சில கூட்டணிக்கு 'ஊகூம்' சொல்லீருங்க அப்படின்னு மின்மோகன் கேட்டுட்டாரு.
அதனாலதான், நம்ம தலைவர் 'பன்றிகதான் கூட்டணி வெக்கும்; சிங்கம் சிங்கிளாதான் நிக்கும்' அப்புடீன்னு பஞ்ச்சு டயலாக்கை பறக்க விட்டாரு' அப்படீன்னு சொன்னான், அந்த ஒடன்புறப்பு.
ஒடன்பொறப்பு சொன்ன இந்த கதையில எந்த அளவுக்கு உண்மை இருக்கு? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சும் சொல்லுலேன்னா, உன் தலை வெடிக்கும்'' என்றது வேதாளம்.
'தஞ்சாவூரு பொம்மையப் புடிச்சு தலைமைப் பதவியில உக்கார வெச்சா இப்படித்தான், ஆளாளுக்கு ஒரு கதைய அவுத்து வுட்டுட்டு திரியுவீங்க. விட்டா, கதை சொல்லுறதுலயும் மக்களைக் குழப்பறதுலயும் உங்க தலைவரயே மிஞ்சீருவீங்க போல இருக்கே. உங்க 'தன்மானச் சிங்கம்' தனியா நிக்கறதுக்கு, தவப் புதல்விய தவிக்க விட்டதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை'', என்றான் விக்கி.
விக்கியின் இந்த சரியான பதிலால் அவன் மவுனம் கலைந்தது; வேதாளம் பறந்தது.