
தி.மு.க., தலைவர் கருணாநிதி: மத நல்லிணக்கம் பற்றிய மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானது தான்.
டவுட் தனபாலு: அவரோட கடந்தகால செயல்பாடுகளை மட்டுமல்ல; குஜராத் கலவரம் நடந்தபோது நீங்க, பா.ஜ., கூட்டணியில தான் இருந்தீங்கன்றதையும், 'அந்தக் கலவரம் அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை'ன்னு சொன்னதையும் கூட மறந்துவிட முடியாது...!
இ.கம்யூ., பேச்சுவார்த்தைக் குழு: உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் இடங்கள் பற்றி, அ.தி.மு.க., குழுவினருடன் பேசினோம். இப்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சு, சுமுகமாகவே இருந்தது. இன்னும் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.
டவுட் தனபாலு: கடைசியில, அந்தம்மா சொல்றதைத் தான் அப்படியே ஏத்துக்கப் போறீங்க... அதுக்கு எதுக்காக, எல்லாரோட நேரத்தையும் வீணாக்கறீங்கன்னு தெரியலை... பேசாம, 'முதல்கட்ட பேச்சுவார்த்தையிலேயே முழு வெற்றி'ன்னு அறிவிச்சுட்டுப் போயிட வேண்டியது தானே...!
தமிழக காங்., தலைவர் தங்கபாலு: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடுகிறது. தே.மு.தி.க.,வின் நிலை பற்றி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். மற்ற கட்சிகளை நாங்கள் வலியுறுத்த விரும்பவில்லை.
டவுட் தனபாலு: உங்க நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா...? ஏழு வருஷமா உங்க கூட்டணியில இருந்த, தி.மு.க.,வே தலை தெறிக்க ஓடிடுச்சு... இதுல, ஏகப்பட்ட கட்சிகள், வாசல்ல தவம் கிடக்கிற மாதிரி, மற்ற கட்சிகளை வலியுறுத்த மாட்டோம்னு பெருந்தன்மை காட்டறீங்களே...!