எல்லாம் தெரிந்த சிதம்பரத்தையும் விசாரியுங்கள் : கோர்ட்டில் ராஜா வழக்கறிஞர் வாதம்
எல்லாம் தெரிந்த சிதம்பரத்தையும் விசாரியுங்கள் : கோர்ட்டில் ராஜா வழக்கறிஞர் வாதம்
எல்லாம் தெரிந்த சிதம்பரத்தையும் விசாரியுங்கள் : கோர்ட்டில் ராஜா வழக்கறிஞர் வாதம்
'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முழுவதுமாகத் தெரியும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை, அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்று, தற்போதைய நிதியமைச்சகம் சார்பில் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதப்பட்ட கடிதம் லீக் ஆகி, பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று டில்லி பாட்டியாலா கோர்ட்டில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது, ராஜாவின் வழக்கறிஞர் சரமாரியாக குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி முன் ஆஜரான ராஜாவின் வழக்கறிஞரான சுசீல் குமார் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ராஜா மீது மட்டுமே முழுவதுமாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால், எந்தவொரு முடிவையும் ராஜா தனிப்பட்ட முறையில், தன்னுடைய இஷ்டத்திற்கு ஏற்ற வகையில் எடுக்கவில்லை. மாறாக, இந்த ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களும் அப்போதைய நிதியமைச்சருக்கு தெரியும். இப்பிரச்னை முழுவதையும் அவர் அறிந்தவர்.
அமைச்சர் சிதம்பரத்தையும், கோர்ட்டிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும். விசாரிப்பதில் என்ன தவறாகிவிடும் என்பது தெரியவில்லை. அவரை குற்றவாளி என்று நாங்கள் கூறவில்லை; சாட்சியாகத்தான் விசாரிக்க வேண்டும் என்கிறோம். அதேசமயம், பிரதமரை அழைத்தாக வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை. அவரை அழைப்பதா, வேண்டாமா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும்.
இவ்வழக்கு தொடர்பாக, 80 ஆயிரம் பக்கங்கள் வரையிலான ஆவணங்களை மட்டுமே சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது. ஆனால், சி.பி.ஐ., வசம் 1 லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் வரையிலான ஆவணங்கள் உள்ளன. தனக்கு தேவைப்படும் ஆவணங்களை மட்டும் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் என்ன காரணத்தினாலோ கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. இது ஏன் என்பது புரியவில்லை.
மீதமுள்ள ஆவணங்களை வரவழைத்து பார்ப்பது, இவ்வழக்கில் உண்மைகளை தெரிந்து கொள்ள கோர்ட்டிற்கு மிகுந்த உதவியாக இருக்கும். மிக முக்கிய ஆவணங்கள் எல்லாம் இதுவரை வெளியாகாமல் உள்ளன. எனவே, எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ., வராது என்றும், ஆவணங்களை அளிக்க முடியாது என்றும் அந்த துறையின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பதையும் கோர்ட் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுசீல் குமார் கூறினார்.
இதன் பிறகு, ராஜாவே எழுந்து வாதாடினார். அப்போது, 'நான் வழங்கிய ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பற்றி மட்டும் பல கேள்விகளை எழுப்பி, இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. ஆனால், 2006-07ம் ஆண்டில் மொத்தம் 23 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, 'டிராய்' தரப்பில் அளிக்கப்படும் பரிந்துரைகளை மீறி வழங்கப்பட்ட உரிமங்கள்.
ஆனால், அந்த உரிமங்கள் குறித்து சி.பி.ஐ., வாய் திறக்க மறுக்கிறது; விசாரிக்கவும் மறுக்கிறது. இது ஏன் என்பது புரியவில்லை. அப்படியெனில், இவ்வழக்கில் வேண்டுமென்றே சிலரை மட்டும் குறி வைத்து சி.பி.ஐ., செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது' என்றார்.
- நமது டில்லி நிருபர் -