/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுயதொழிலில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் மிதியடியில் "கால்' பதிப்புசுயதொழிலில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் மிதியடியில் "கால்' பதிப்பு
சுயதொழிலில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் மிதியடியில் "கால்' பதிப்பு
சுயதொழிலில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் மிதியடியில் "கால்' பதிப்பு
சுயதொழிலில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் மிதியடியில் "கால்' பதிப்பு
ADDED : ஆக 11, 2011 11:07 PM
உடுமலை : உடுமலை அருகே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்த மலைவாழ் மக்கள், தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதல் முறையாக சுயதொழிலில் களமிறங்கியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகப் பகுதிகளில், தளிஞ்சி, கோடந்தூர், ஈசல்திட்டு உட்பட 14 வனக் குடியிருப்புகளில், 2,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், வனங்களில் கிடைக்கும் பொருட்களையும், சாகுபடி செய்த பொருட்களையும் விற்பனை செய்து கிடைக்கும் வருவாயிலும், சிலர் கால்நடைகள் மேய்த்தும், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இதில் போதிய வருவாய் கிடைக்காத காரணத்தால், தற்போது சுய தொழிலில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பெண்கள், தற்போது சுய தொழிலாக, தேங்காய் மஞ்சிலிருந்து கால் மிதியடிகள் மற்றும் ஆபரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் பொள்ளாச்சி மத்திய கயிறு வாரியம் சார்பில், கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்கள் தயாரிக்கும் பொருட்களை, கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு அருகே ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் விற்பனை செய்து வருகின்றனர். முதலில் தயக்கம் காட்டிய மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பெண்கள், தற்போது ஆர்வமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 15 பெண்கள் கால் மிதியடி தயாரிப்பிலும், 15 பெண்கள், ஆபரணங்கள் தயாரிப்பு என, 30 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், 30 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கால்மிதியடி தயாரிக்க, 42 ரூபாய் செலவாகிறது. மாதந்தோறும் 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக, பெண்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். சுய தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், 'துவக்கத்தில் பயிற்சி கடினமாக தெரிந்தாலும், பழகியதும் எளிதாக உள்ளது. ஒரு மணி நேரத்தில் ஒரு கால் மிதியடி தயாரிக்கிறோம். இப்பகுதியில் தயாரிக்கும் பொருட்களை, கோடந்தூர் கோவிலில் விற்பனை செய்து வருகிறோம். போதிய இயந்திரங்கள் வாங்க அரசு உதவி செய்ய வேண்டும்' என்றனர். ''சுய தொழில் துவங்கியுள்ள மலைவாழ் மக்களின் பொருளாதாரம் மேம்பட, அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்தால் அவர்கள் முன்னேற முடியும்,'' என, உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜ் தெரிவித்தார். விற்பனை சந்தை வேண்டும்: மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சுய தொழிலாக மேற்கொண்டு வரும் கால் மிதியடிகள் விற்பனை செய்ய போதிய சந்தை இல்லை. இதனால், உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் விற்பனைக்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பு.