வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ. பல லட்சம் மோசடி புகார்
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ. பல லட்சம் மோசடி புகார்
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ. பல லட்சம் மோசடி புகார்
ADDED : ஆக 03, 2011 01:43 AM
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் ஊராட்சியில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.பல லட்சம் மோசடி குறித்த மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வாலிநோக்கம் ஏழைகள் உதவி மைய செயலாளர் பஷீர் அகமது தாக்கல் செய்த பொது நல வழக்கு: மத்திய அரசு கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஊராட்சிகள் மூலம் அமல்படுத்துகிறது.
ஊராட்சி தலைவர், அந்த பகுதியிலுள்ள ஏழைகளுக்கு திட்டத்தில் நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் மற்றும் வேலை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை ஊராட்சி தலைவர் ஏற்க வேண்டும். வாலிநோக்கத்தில் இத்திட்டத்தில் ரூ.பல லட்சம் மோசடி நடந்தது. இதில் தலைவருக்கு தொடர்புள்ளது. இறந்தவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்களை திட்டத்தில் சேர்த்து பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டிலுள்ள காதர் உசேன், அரபிக்கடலில் மீன் பிடி தொழில் செய்யும் முகமது இப்ராகிம் போன்றவர்கள் பெயரில் பணம் பெற்று மோசடி நடந்தது. இதுகுறித்து ஜூன், 6ல் ஊராட்சி உதவி இயக்குனரிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. மோசடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகவாச்சாரி, ரமேஷ் ஆஜராயினர்.
நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், ''வேலை உறுதி திட்ட மோசடி குறித்த மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கலெக்டருக்கு உத்தரவிட்டது.


