"108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் : சுகாதாரத்துறை சங்கங்கள் கோரிக்கை
"108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் : சுகாதாரத்துறை சங்கங்கள் கோரிக்கை
"108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் : சுகாதாரத்துறை சங்கங்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 12:54 AM

சென்னை : 'அவசர உதவிக்கான,'108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு சுகாதாரத்துறை சங்கங்கள் மற்றும் பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவம், சுகாதாரத்துறை சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பணிகளில் சேர, மருந்தாளுனர்கள் வயது உச்ச வரம்பை, பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, முற்றிலும் தளர்த்தி, வேலை வழங்கியது போல், எப்.சி., பிரிவிற்கும் வயது வரம்பை தளர்த்தி, அரசு வேலை வழங்க வேண்டும். தற்காலிக பணியில் உள்ள டாக்டர்களை, டி.என்.பி.எஸ்.சி., சிறப்புத் தேர்வு நடத்தி, நிரந்தரம் செய்வதோடு, வரும் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகள் பயில, வாய்ப்பளிக்க வேண்டும். இயன்முறை மருத்துவம் பயின்ற, பிசியோதெரப்பிஸ்டுகள், ஓராண்டு படிப்பை படித்த பாராமெடிக்கல் டெக்னீஷியன்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில், வேலை வாய்ப்பை உருவாக்கி, வழங்க வேண்டும்.
வேலையின்றி தவிக்கும் மருந்தாளுனர்களை, காலியாக உள்ள இடங்களில் நியமிக்க வேண்டும். '108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்துவதோடு, அதில் பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றும், 2,635 தற்காலிகமாக மருந்தாளுனர், லேப்-டெக்னீஷியன், துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதுபோல், தற்காலிகமாக பணிபுரியும் 3,000க்கும் மேற்பட்ட கிராம நல, நீர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு சங்க நிர்வாகிகள் கூறினர்.