Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"மாஜி' அமைச்சர் நேரு கைது!

"மாஜி' அமைச்சர் நேரு கைது!

"மாஜி' அமைச்சர் நேரு கைது!

"மாஜி' அமைச்சர் நேரு கைது!

ADDED : ஆக 25, 2011 11:25 PM


Google News
Latest Tamil News
திருச்சி: நில அபகரிப்பு புகாரில், முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர், டாக்டர் சீனிவாசன், 60. இவருக்கு, துறையூரில் சீனிவாசன் மருத்துவமனை, சீனிவாசன் மணிமேகலை நர்சிங் மற்றும் பி.எட்., கல்லூரி உள்ளது. ஒரு காம்ப்ளக்சும், திருச்சி ரோட்டில் உள்ளது. இவர், சில நாட்களுக்கு முன், திருச்சி மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார். புகாரில், 'தற்போது திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள, தி.மு.க., கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்ட, என்னுடைய, 13 ஆயிரத்து, 920 சதுர அடி நிலத்தை மிரட்டி, அபகரித்துக் கொண்டனர். நில அபகரிப்பு நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, திருச்சி மாநகராட்சி துணைமேயர் அன்பழகன், தி.மு.க., நிர்வாகி குடமுருட்டி சேகர், லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு, லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தர்ராஜன், நில புரோக்கர்கள் தமிழ்மாறன், அவரது மகன் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., பிரமுகர் ஷெரீப், பந்தல் கான்ட்ராக்டர் மாமுண்டி ஆகிய 11 பேர், என்னையும், என் குடும்பத்தாரையும் கடத்தி, கொலைமிரட்டல் விடுத்து, வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த புகாரின் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று காலை 6 மணிக்கு, திருச்சி தில்லை நகரில் உள்ள வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் நேரு, கைது செய்யப்பட்டார். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு ஆகிய இருவரும், அவரவர் வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும், கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்துக்கு கொண்டு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி உள்ளிட்ட மூவரின் கைது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.,வினரும், கட்சி வழக்கறிஞர்களும், ஆயுதப்படை திருமண மண்டபம் முன் குவிந்தனர். அவர்களை வாசலில் தடுத்து நிறுத்திய போலீசார், வழக்கறிஞர்கள், ஒரு சில கட்சியினர் தவிர யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க.,வினர், போலீசாருக்கும், அ.தி.மு.க., அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: துறையூர் டாக்டர் சீனிவாசன் கொடுத்த நில அபகரிப்பு, கொலைமிரட்டல் புகாரின் பேரில், கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இது பொய் புகார். ஏற்கனவே எங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதற்கு, முன்ஜாமின் கேட்டு, மதுரை கோர்ட்டில் வழக்கு உள்ளது. அப்படியிருந்தும், கைது செய்யப்பட்டுள்ளோம். வழக்கை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு நேரு கூறினார்.

நேரு உள்ளிட்ட மூவரையும், போலீசார், ஜே.எம்., 1 நீதிமன்ற (பொ) நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை, வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரையும், போலீசார், திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று, பின், அங்கிருந்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

கடலூர் சிறைக்கு, நேரு அழைத்து வரப்படுகிறார் என்பதை அறிந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சேர்மன் தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, ஏ.ஜி.ராஜேந்திரன் உட்பட ஏராளமான தி.மு.க., தொண்டர்கள், மத்திய சிறை வளாகத்தில் குவியத் துவங்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி.,க்கள் மணி, வனிதா தலைமையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம் 1.25 மணிக்கு, நேரு உள்ளிட்ட மூவரும், சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். 1.43 மணிக்கு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

'தட்டு கொடுங்க' : வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை, சிறை வளாகத்தில், வேனில் இருந்த படியே, நேரு உள்ளிட்ட மூவரும் சாப்பிட்டனர். சாப்பிடுவதற்குக் கட்சியினர் இலை கொண்டு வந்ததால், டென்ஷனான நேரு, 'இலையில் எப்படிச் சாப்பிடுவது? தட்டு கொடுங்க...' என, கூச்சலிட்டார்.

வெளிநாட்டில் ராமஜெயம் : வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். ஏதாவது வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், அண்ணன் நேருவின் ஆலோசனைப்படி, ராமஜெயம் கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். தற்போது, அண்ணன் நேரு கைது செய்யப்பட்டுள்ளதால், வெளிநாட்டிலிருக்கும் ராமஜெயம், இன்னும் சில நாட்களில் தமிழகம் வந்து, போலீசில் சரணடைவார் என தெரிகிறது.

குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டால் தான் ஜாமின் கிடைப்பது எளிதாகும் என்ற காரணத்தாலும், ராமஜெயம் விரைவில் போலீசில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us