Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு கேபிள் "டிவி' செயல்படுவது எப்போது?ஆட்சி மாறியது; "காட்சி' மாறவில்லை!

அரசு கேபிள் "டிவி' செயல்படுவது எப்போது?ஆட்சி மாறியது; "காட்சி' மாறவில்லை!

அரசு கேபிள் "டிவி' செயல்படுவது எப்போது?ஆட்சி மாறியது; "காட்சி' மாறவில்லை!

அரசு கேபிள் "டிவி' செயல்படுவது எப்போது?ஆட்சி மாறியது; "காட்சி' மாறவில்லை!

ADDED : செப் 25, 2011 01:18 AM


Google News

கோவை :கட்டண சேனல்கள் இல்லாத காரணத்தால், கோவையில் அரசு கேபிள் 'டிவி' சிக்னல் வழங்கியும், கேபிள் ஆபரேட்டர்கள், தனியார் எம்.எஸ்.ஓ., சிக்னலை பயன்படுத்தியே சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

'கட்டண சேனல்களை வழங்காத வரை, அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், செயல்பட்டும் பயனில்லை' என்கின்றனர், ஆபரேட்டர்கள்.

'கேபிள் 'டிவி' தொழிலில் தனியாரின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது, அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன். முந்தைய ஆட்சியில் துவங்கி, அதே வேகத்தில் முடங்கியும் போன கார்ப்பரேஷனுக்கு, இந்த ஆட்சியில் புத்துயிர் தரப்பட்டது.கடந்த 2ம் தேதி, அரசு கேபிள் ஒளிபரப்பை முதல்வர் துவக்கி வைத்தார். அன்றே, பெரும்பாலான மாவட்டங்களிலும் ஒளிபரப்பு துவங்கியது. 90 சேனல்கள், மாதம் 70 ரூபாய் என்ற கட்டணத்துடன் துவங்கிய ஒளிபரப்பில், கட்டண சேனல்கள் இல்லை; இலவச சேனல்கள் மட்டுமே இருந்தன. வாடிக்கையாளர் பிரச்னையை சமாளிக்கும் நோக்கத்துடன், 'டிடிஎச்' மூலம் கட்டண சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர், சில மாவட்ட ஆபரேட்டர்கள்.கோவையில், கடந்த 5ம் தேதி அரசு கேபிள் ஒளிபரப்பு துவங்கியது. துவங்கிய நாளன்று, கோவை மாநகரில் பெரும்பான்மையான கேபிள் ஆபரேட்டர்கள், சிக்னல் இணைப்பு பெற்றுக்கொண்டனர்; ஓரிரு நாட்கள் ஒளிபரப்பும் செய்தனர். கட்டண சேனல்கள் இல்லாததற்கு வாடிக்கையாளர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதும், ஆபரேட்டர்கள் ஒவ்வொருவராக பின் வாங்கி விட்டனர்.இப்போது, கோவை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் தனியார் எம்.எஸ்.ஓ., சிக்னல் மூலமே கேபிள் 'டிவி' ஒளிபரப்பாகிறது. 2,880 ஆபரேட்டர்கள், ஒன்றரை லட்சம் இணைப்புகளுடன் கோவை மாவட்டத்தில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட அரசு கேபிள் 'டிவி' பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது; அதன் சிக்னல் இருந்தாலும், ஆபரேட்டர்கள் யாரும் அதை ஒளிபரப்ப தயாராக இல்லை.'அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் செயல்பாடுகளில், எந்தவிதமான தெளிவும், வெளிப்படையும் இல்லாதது தான் பிரச்னைக்கு காரணம்' என்கின்றனர், ஆபரேட்டர்கள்.'எப்போது கட்டண சேனல்கள் வரும்; அப்படி கட்டண சேனல்கள் வந்தால், இப்போதிருக்கும் எழுபது ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுமா' என்ற இரு முக்கிய கேள்விகளுக்கும், அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தரப்பில் பதில் இல்லை; முரண்டு பிடிக்கும் கட்டண சேனல்களை வழிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது: கோவை மாநகரில், இணைப்புக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை, பகுதிக்கு தகுந்தபடி கேபிள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் எம்.எஸ்.ஓ.,வுக்கு, இணைப்புக்கு ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆபரேட்டருக்கு இணைப்புக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.அரசு கேபிள் 'டிவி'யிலும், அதே 50 ரூபாய் லாபம் கிடைக்கும் வகையில் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். எனவே, ஆபரேட்டர்களை பொறுத்தவரை, இப்போதைக்கு அரசு கேபிளால், லாபமோ, நஷ்டமோ இல்லை. வாடிக்கையாளர்களை இழந்து விடக்கூடாது என்பது தான் எங்கள் கவலை. அரசு கேபிள் சிக்னல் கொடுத்தால், 'கட்டண சேனல் இல்லை' என்று கூறி, வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டணம் தர மறுப்பர். பொருளாதாரத்தில் முன்னேறிய பகுதிகளில், ஓரிரு நாட்கள் விரும்பிய சேனல் தரவில்லை என்றால்கூட, வாடிக்கையாளர் 'டிடிஎச்'க்கு மாறி விடும் நிலை இருக்கிறது.துவக்கத்தில் ஓரிரு நாட்கள் அரசு கேபிள் சிக்னல் கொடுத்தோம். வாடிக்கையாளர் எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும், புரிந்து கொண்ட நிலையில், இப்போது தனியார் எம்.எஸ்.ஓ., சிக்னலை மீண்டும் ஒளிபரப்பி வருகிறோம். எங்களது நிலையை விளக்கி மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்திருக்கிறோம்.அரசு கேபிள் சிக்னல் எங்களுக்கு தரப்பட்டு விட்டது. அதன் மூலம் சேனல் ஒளிபரப்பவும் ஆபரேட்டர்கள் தயாராகவே உள்ளனர். வாடிக்கையாளர் கேட்கும் கட்டண சேனல்களை அரசு வழங்கினால் போதும்.இவ்வாறு, ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.கோவை கலெக்டர் கருணாகரனிடம் கேட்டபோது, ''கோவை மாவட்டத்தில், செப்.,5ம் தேதி முதல் அரசு கேபிள் ஒளிபரப்பு துவங்கியது. ஊரகப்பகுதிகளில் இணைப்பு தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை, அரசு கேபிள் கார்ப்பரேஷன் செய்கிறது. சமீபத்தில் கூட, சில கட்டண சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன,'' என்றார்.



அரசு கேபிள் ஆபீஸ், மர்ம தேசமா?கோவையில், காந்திபுரம் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம் முதல் தளத்தில் கேபிள் கார்ப்பரேசன் அலுவலகம் செயல்படுகிறது. ஏதோ மர்ம தேசம் போல், நுழையும் இடத்திலேயே,'தடை செய்யப்பட்ட பகுதி, அந்நியர் பிரவேசிக்கக்கூடாது' என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் இருந்து தான், கேபிள் ஆபரேட்டர்களுக்கு சிக்னல் தரப்படுகிறது. இங்கிருக்கும் ஊழியர்களும், 'எதுவாக இருந்தாலும், சென்னை தலைமை அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும். எங்களுக்கு எதுவுமே தெரியாது' என்று தெரிவித்தனர். அவர்களிடம் பேசியபோது, 'கோவை மாநகரம் முழுவதும் கேபிள் இணைப்பு தரப்பட்டு விட்டது. ஊரகப்பகுதிகளில் கேபிள் இணைப்பு கொண்டு செல்லும் வேலைகள் நடக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வேலைகள் முடிந்து விடும். இணைப்பு தரும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு, வாடிக்கையாளர் 70 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்பது தான் அரசு உத்தரவு. அதற்கு மேல் தரத்தேவையில்லை' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us