
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை : மது விற்பனையால் அரசுக்கு ஆண்டிற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றால், மதுவை அருந்துவோருக்கு ஏற்படும், பாதிப்புகளை சரி செய்ய ஆகும் மருத்துவச் செலவு, லட்சக்கணக்கான கோடி ரூபாய்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: டீசல் விலை ஏற்றத்தால், பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அரசு பஸ்களின் வழித்தடங்களுக்கு, புதிய பெயர்கள் சூட்டப்பட்டு, சத்தம் இல்லாமல் பஸ் கட்டணங்களை உயர்த்தி விட்டனர். தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் பயணக் கட்டணங்களைத் தாமாகவே உயர்த்திக் கொண்டதை, தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேட்டி: உணவு, உரம் உள்ளிட்ட பொருட்களுக்கான மானியமும் உயர்த்தப்பட வேண்டும்; அதே வேளையில், பணப் புழக்கத்தின் இலக்கையும் எட்ட வேண்டும். இதற்காக, சில எதார்த்தமான நடவடிக்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் பேட்டி: காமன்வெல்த் போட்டி ஊழல்கள் மற்றும் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி மற்றும் அசோக் சவான் ஆகியோருக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இருவருமே அப்பாவிகள் என்பது தான், என் தனிப்பட்ட கருத்து. ஆனால், இந்த சிக்கலில் சோனியா தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேட்டி: மின் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில் மின் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு: சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நம் நாட்டின் உற்பத்தித் துறை முற்றிலும் அழிந்து போகும். அதனால், நாட்டின் பொருளாதாரமே அழிந்து விடும். அமெரிக்காவில் இது தான் நடந்தது.


