ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஸ்டேட் பாங்க் கிளைகள் சார்பில் இலவசமாக மின் விசிறிகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில், திருப்பூர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் தென்னம்பாளையம், சேயூர், நல்லூர் மற்றும் வீரபாண்டி கிளைகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 40 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில், கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். வங்கி கிளை மேலாளர்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினர்.தென்னம்பாளையம் ஸ்டேட் பாங்க் மேலாளர் விஜயமூர்த்தி பேசுகையில், ''திருப்பூர் பகுதியில் உள்ள ஏழு வங்கி கிளைகளின் சார்பில் ஏழை மாணவியர் தத்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு கல்வி செலவையும் வங்கி ஏற்றுக்கொள்ளும். அவ்வகையில் ஒவ்வொரு கிளைக்கும் தலா இரண்டு மாணவியர் என்ற அளவில் மொத்தம் 14 பேரை தேர்வு செய்து பட்டியல் வழங்க வேண்டும்,'' என்றார்.கலெக்டர் மதிவாணன் பேசுகையில், ''அரசு பள்ளிகளில் 2 அல்லது 3ம் வகுப்பில் பயிலும், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் முழு கல்வி செலவையும் வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும், தகுதியும், திறமையும் கொண்ட, மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள ஐந்து மாணவியர் பெயரை தேர்வு செய்து, முதன்மை கல்வி அலுவலரிடம் இரண்டு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.''வரும் 16ம் தேதி பள்ளிக்கு தலா 2 பேர் என 7 பள்ளிகளில் இந்த உதவிக்கு தேர்வு செய்யப்படுவர். வரும் 22 அல்லது 29ம் தேதியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். மேல்நிலைப்படிப்பு வரை, அம்மாணவியரின் கல்வி செலவை வங்கி ஏற்றுக்கொள்ளும். கல்லூரி அல்லது தொழில் படிப்பு போன்ற உயர்கல்விக்கு அந்த வங்கியின் மூலம் கல்விக் கடன் வழங்கப்படும்,'' என்றார்.முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், வங்கி கிளை மேலாளர்கள் சேகர், ராஜசேகர், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.