/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பட்ஜெட்டில் கோவைக்கு எதுவுமில்லை : சிறப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடும் இல்லைபட்ஜெட்டில் கோவைக்கு எதுவுமில்லை : சிறப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடும் இல்லை
பட்ஜெட்டில் கோவைக்கு எதுவுமில்லை : சிறப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடும் இல்லை
பட்ஜெட்டில் கோவைக்கு எதுவுமில்லை : சிறப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடும் இல்லை
பட்ஜெட்டில் கோவைக்கு எதுவுமில்லை : சிறப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடும் இல்லை
ADDED : ஆக 05, 2011 01:27 AM
கோவை : தமிழக பட்ஜெட்டில் கோவைக்கு சிறப்பு திட்டங்கள் ஏதும்
அறிவிக்கப்படாததால் மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த
2001க்கு பிறகு நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், கோவை
அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாறியது. இந்நிலையை மாற்ற, கடந்த 5 ஆண்டுகளில்
கோவையின் மீது தி.மு.க., தலைமை அதிக கவனம் செலுத்தியது. ஜவஹர்லால் நேரு
தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் கோவையில் ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்பிலான பணிகள் துவங்கின. முப்பது கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி சாலை
விரிவாக்கம், 15 கோடி ரூபாய் மதிப்பில் திருச்சி ரோடு அகலப்படுத்துதல், 37
கோடி ரூபாயில் மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கம், ஹோப் காலேஜ் பாலம்
விரிவாக்கம், 380 கோடி ரூபாய் மதிப்பில் 'டைடல் பார்க்', செம்மொழி
மாநாட்டையொட்டி பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் என,
பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
தவிர, 284 கோடி ரூபாய்
மதிப்பில் மேற்கு புறவழிச்சாலை, மத்திய சிறை வளாகம் உள்ள இடத்தில் சர்வதேச
தரத்திலான தாவரவியல் பூங்கா, காந்திபுரத்தில் 148 கோடி ரூபாய் மேம்பாலம் என
பல திட்டங்களையும் தி.மு.க., அரசு அறிவித்தது.
ஆனால், அவற்றை நிறைவேற்ற
தி.மு.க., அரசு அக்கறை காட்டாததால் அவை காகிதத்திலேயே தேங்கி
விட்டன.தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக
குற்றச்சாட்டுகள் இருந்தாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படை
மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. அப்படியிருந்தும், தி.மு.க.,
கூட்டணிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கவில்லை. தமிழகம்
முழுவதும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றாலும், கோவை மாவட்டத்தில்
'பத்துக்குப் பத்து' தொகுதியையும் கொடுத்து, கோவை மாவட்ட மக்கள் மீண்டும்
அ.தி.மு.க.,வுக்கே ஆதரவளித்தனர். இதற்கு நிச்சயமாக பிரதிபலன்
கிடைக்குமென்று மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும்
இந்த நம்பிக்கை ஜெயிக்கவில்லை.மொத்தம் 8 தொகுதிகளில் அ.தி.மு.க., நேரடியாக
வென்றும், இந்த மாவட்டத்துக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு மட்டுமே
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. மூன்றில் ஒரு தொகுதியை மட்டும்
கொடுத்த நீலகிரி மாவட்டத்துக்குக் கொடுத்த அதே பிரதிநிதித்துவமே
கோவைக்கும் தரப்பட்டதிலேயே கட்சிக்காரர்களும், மக்களும் அதிருப்தியில்
உள்ளனர்.இந்த அதிருப்தியை விரக்தியாக மாற்றியிருக்கிறது, சட்டசபையில்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். அதில், கோவைக்கு என்று எந்தவொரு
சிறப்புத் திட்டமும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. கட்சியின்
கோட்டை என்பதற்காக இல்லாவிட்டாலும், சென்னைக்கு அடுத்த பெரிய நகரம்
என்பதைக் கூட, அரசு கவனத்தில் கொள்ளாதது மக்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
சென்னைக்கு மோனோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு
நிதி, திருச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்த 100 கோடி நிதி என பல
திட்டங்களையும் அறிவித்த போது, கோவைக்கு ஏதாவது அறிவிப்பு வருமென்று ஆவலோடு
கோவை மக்கள் காத்திருந்தனர். இறுதியில் கிடைத்தது ஏமாற்றமே.புதிய திட்டம்
எதுவும் இல்லாவிட்டாலும், முந்தைய அரசு அறிவித்த காந்திபுரம் பாலம், மேற்கு
புறவழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் இந்த அரசு முன்
வரவில்லை. கோவைக்கு தொழில் துறை அமைச்சர் பதவியை தந்த ஜெ., இந்த நகரின்
தொழில் முன்னேற்றத்துக்காகவும் எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
முந்தைய அரசு அறிவித்தது என்ற ஒரே காரணத்துக்காக செம்மொழிப் பூங்கா,
காந்திபுரம் பாலம், மேற்கு புறவழிச்சாலை போன்ற திட்டங்களை இந்த அரசு
புறக்கணித்தால், அதற்கு மாற்றாக வேறு ஏதாவது திட்டங்களை இந்த அரசு
அறிவிப்பது அவசியம்.