அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்
அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்
அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்

வாஷிங்டன் : 'நாட்டின் நிதிப் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறையை போக்க வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கான செலவுகளை குறைப்பது, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சீர்திருத்த திட்டங்களுக்கான செலவை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். வரி விதிப்பு முறையில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, எந்த ஒரு சமாதானப்போக்கிற்கும் தயாராக உள்ளேன். இதே அளவுக்கு சமாதானப்போக்கை, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே, என் வேண்டுகோள். செலவுகளை குறைக்காமல், பற்றாக்குறையை போக்க முடியாது.
இந்த பிரச்னைக்கு, அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்களும், தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால், பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த சுமையை தாங்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள், பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. எனவே, வரிச் சலுகை காட்டப்பட வேண்டும் என, அந்த நிறுவனங்கள் கேட்கும் என, நான் நினைக்கவில்லை. 'ஹெட்ஜ்பண்ட் மேனேஜர்கள்' தங்களின் செயலர்களை விட, குறைவாக வரி செலுத்துவார்கள் என்றும், நான் நினைக்கவில்லை. இவ்வாறு ஒபாமா பேசினார்.