ADDED : ஆக 25, 2011 11:36 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி தமிழ்த்துறை, முத்தமிழ்
கலை மன்றம் சார்பில் 'தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு
நடந்தது.
கல்லூரி தலைவர் விஜயமோகன் வரவேற்றார். முன்னாள் மத்திய சட்ட
அமைச்சர் வேங்கடபதி தலைமை வகித்து பேசியதாவது: மாணவர்கள் தமிழ்மொழியில்
உள்ள இலக்கியங்களை படிக்கும் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி
அழிந்துவிடாமல், பாதுகாக்க வேண்டும். உலகிலுள்ள மொழிகளில், லத்தீன் மொழி
அழிந்து விட்டது. ஆனால், அதே பழமையான தமிழ் மொழி இன்னும் வளர்ந்து
கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பு பொறுத்தவரை இளைஞர்களுக்கு ஆங்கில மொழி
தேவையாக உள்ளது. இதனால், தமிழ் மொழி போன்று ஆங்கில மொழியையும் பிழையின்றி
சரளமாக பேசும் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். 'உலக மயமாக்கல்' என்ற
நிலைக்கு சென்று கொண்டிருப்பதால், தகவல்களை பரிமாறி கொள்ள தாய் மொழி
மட்டும் போதுமானதாக இருக்காது. தமிழ் இலக்கியங்களையும் பாதுகாக்க வேண்டியது
நமது கடமை. தமிழ் இலக்கியங்களை படிப்பதன் மூலம் நமது அறிவை மேம்படுத்த
முடியும். தாய் மொழியை சரளமாக பேச தெரியாதவர்களால், பிற மொழிகளை கற்று
கொள்ள முடியாது. எனவே, தாய்மொழியோடு பிற மொழி அறிவும் வேண்டும், என்றார்.
கருத்தரங்கில், கல்லூரி துணை தலைவர் சேதுபதி, செயலாளர் வெங்கடேஷ், தலைமை
இயக்குனர் சேட்டு, முதல்வர் வெங்கடேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.